ஐகோர்ட்டு தடை மீறல்: 2–வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ அமைப்பின் ஒருபிரிவினர் நேற்றும் 2–வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ அமைப்பின் ஒரு பிரிவினர் கடந்த 7–ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்தம் தொடங்கிய நேற்று முன்தினம் தாலுகா அளவில் மறியல் போராட்டமும் நடந்தது. 2–வது நாளான நேற்றும் வேலை நிறுத்தம் தொடர்ந்தது. மதுரை ஐகோர்ட்டு கிளை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்துக்கு தடை விதித்துள்ள நிலையிலும் தமிழக அரசின் தலைமை செயலாளர் வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும் விருதுநகர் மாவட்டத்தில் வேலை நிறுத்தம் தொடர்ந்தது.
மாவட்டத்தில் 11,752 ஆசிரியர்களில் 1,103 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது மொத்தம் உள்ள ஆசிரியர்களில் 9.4 சதவீதம் ஆகும். பெண்கள் 456 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 11,595 அரசு ஊழியர்கள் உள்ள இந்த மாவட்டத்தில் 3,260 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதில் 2,098 பேர் பெண்கள். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோரின் சதவீதம் 19.64 ஆகும். மொத்தம் 4,363 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறை அலுவலகங்களில் பணி பாதிப்பு ஏற்பட்டது. பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டன.
வேலை நிறுத்தம் செய்து வரும் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் நேற்று மாவட்ட தலைநகரில் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர். ஆனால் இதில் மாற்றம் செய்து நேற்று விருதுநகரில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். இதனையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.