ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் சிக்கினர்


ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 9 Sep 2017 10:09 PM GMT (Updated: 9 Sep 2017 10:09 PM GMT)

சிந்துதுர்க் அருகே ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

சிந்துதுர்க் மாவட்டம் தேவ்காட் பகுதியில் மகாத்மா காந்தி வித்யா மந்திர் என்ற பள்ளிக்கூடம் உள்ளது. இதன் தலைமை ஆசிரியராக சதாசிவ் சாந்தாராம் பாட்டீல் (வயது 57) பணியாற்றி வருகிறார்.

அரசு உதவி பெறும் இந்த பள்ளிக்கூடத்தில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் 32 வயது ஆசிரியர் ஒருவர், தன்னை நிரந்தர ஆசிரியராக பணியமர்த்த கோரி மாவட்ட பள்ளிக்கல்வி துறைக்கு கடிதம் எழுதினார்.

இதற்கு சிபாரிசு செய்ய தலைமை ஆசிரியர் சதாசிவ் சாந்தாராம் பாட்டீல் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த ஆசிரியர், தவணை முறையில் பணம் தருவதாக கூறிவிட்டு நகர்ந்தார்.

பின்னர், இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்களது ஆலோசனைப்படி முதற்கட்டமாக ரசாயன பொடி தடவிய ரூ.5 லட்சத்துடன் தலைமை ஆசிரியர் சதாசிவ் சாந்தாராம் பாட்டீலை நேற்று காலை அவரது வீட்டில் சந்தித்தார்.

அப்போது, பணத்தை அவரது வீட்டில் இருந்த சந்தோஷ் (50) என்பவர் பெற்றுக்கொண்டார். இதனை மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சந்தோசையும், சதாசிவ் சாந்தாராம் பாட்டீலையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story