கோவையில் இரட்டைக்கொலை: ‘எங்களை கொலை செய்வதாக மிரட்டியதால் தீர்த்துக்கட்டினோம்’ போலீசில் சரண் அடைந்த 4 பேர் வாக்குமூலம்


கோவையில் இரட்டைக்கொலை: ‘எங்களை கொலை செய்வதாக மிரட்டியதால் தீர்த்துக்கட்டினோம்’ போலீசில் சரண் அடைந்த 4 பேர் வாக்குமூலம்
x
தினத்தந்தி 24 Sep 2017 12:00 AM GMT (Updated: 23 Sep 2017 7:35 PM GMT)

‘எங்களை கொலை செய்வதாக மிரட்டி வந்ததால் நாங்கள் முந்திக்கொண்டு கொலை செய்தோம்’ என்று இரட்டைக்கொலை வழக்கில் போலீசில் சரண் அடைந்த 4 பேர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கோவை,

கோவை செல்வபுரம் ஐ.யு.டி.பி. காலனியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 38). கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2–ந்தேதி வினோத்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் செல்வராஜ் கைதாகி சமீபத்தில் ஜாமீனில் விடுதலையாகி இருந்தார். கோர்ட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, நண்பர் ஆனந்த் என்பவருடைய ஆட்டோவில் செல்வபுரம் நோக்கி நேற்று முன்தினம் பகல் 1.30 மணிக்கு சென்றார்.

செல்வ சிந்தாமணி குளம் அருகில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல் விரட்டிச்சென்று செல்வராஜையும், ஆனந்தையும் சரமாரியாக வெட்டிக்கொன்றது. பட்டப்பகலில் நடைபெற்ற இந்த இரட்டைக்கொலை கோவையில் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொலை நடைபெற்ற ஒரு மணிநேரத்தில் 4 பேர் போலீசில் சரண் அடைந்தனர். சி.சூர்யா(வயது 20), செல்வபுரம். மற்றொரு சூர்யா(20), தேவேந்திரவீதி, செல்வபுரம். மோகன்ராஜ்(20), பேரூர் மெயின்ரோடு, கோவை. விக்னேஷ்குமர்(20), செல்வபுரம் ஆகிய 4 பேரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த கொலை வழக்கில் போளூவாம்பட்டியை சேர்ந்த விஜயராஜ்(30) என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். இவர் போளூவாம்பட்டி அருகே அகதிகள் முகாமில் வசித்து வருகிறார். விஜயராஜ் மீது மேலும் பல வழக்குகள் உள்ளன.

போலீசில் சரண் அடைந்த 4 பேரும் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:–

எங்களுடைய நண்பர் வினோத்குமாரை கடந்த ஜூன் மாதம் 2–ந்தேதி செல்வராஜ், குண்டு ராஜன் ஆகியோர் சேர்ந்து கொலை செய்தனர். இது தொடர்பாக செல்வபுரம் போலீசார் 2 பேரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வராஜ் ஜாமீனில் வெளியே வந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாங்கள் செல்வபுரம் பகுதியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தோம். அங்கு வந்த செல்வராஜ் எங்களை பார்த்து முறைத்தார். ‘வினோத்குமாரையே கொலை செய்து விட்டேன். உங்களையும் கொன்றுவிடுவேன்’ என்று எங்களை பார்த்து மிரட்டினார். எனவே அவர் எங்களை கொலை செய்வதற்கு முன்பாக நாங்கள் அவரை கொலை செய்ய திட்டமிட்டோம்.

இதற்காக அவரை பின்தொடர்ந்து சென்று நோட்டமிட்டோம். அவர் தினமும் கோர்ட்டில் கையெழுத்து போட்டுவிட்டு வீட்டுக்கு செல்லும் நேரத்தில் கொலை செய்ய சரியான நேரத்தை தேர்வு செய்து செல்வராஜை தீர்த்துக்கட்டினோம். ஆட்டோ டிரைவர் ஆனந்த் செல்வராஜை காப்பாற்ற முயன்றதால் அவரையும் கொலை செய்தோம்.

இவ்வாறு 4 பேரும் போலீசில் கூறியுள்ளனர்.

இவர்கள் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story