காதலித்து திருமணம் செய்யாவிட்டால் பெட்ரோல் ஊற்றி தீவைப்பேன் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொலை மிரட்டல்


காதலித்து திருமணம் செய்யாவிட்டால் பெட்ரோல் ஊற்றி தீவைப்பேன் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 1 Oct 2017 4:45 AM IST (Updated: 1 Oct 2017 3:08 AM IST)
t-max-icont-min-icon

காதலித்து திருமணம் செய்யாவிட்டால் பெட்ரோல் ஊற்றி தீவைப்பேன் என்று முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

பெங்களூரு,

ஆன்–லைனில் ‘அன்அகாடமி‘ எனும் பயிற்சி வகுப்பு நடத்தி வருபவர் ரோமன் சைனி (வயது 26). இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் சமீபத்தில் தனது பணியை ராஜினாமா செய்தார். அதனைத்தொடர்ந்து, ஏழை மாணவர்கள் அரசு தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு வசதியாக ‘ஆன்–லைனில்‘ அரசு தேர்வுகளுக்கான பயிற்சியை கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில், முகநூலில் (பேஸ்புக்) ரோமன் சைனியுடன் சித்ரா கீதா என்ற இளம்பெண் நண்பராக உள்ளார். திடீரென்று ஒருநாள் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ரோமன் சைனியின் இ–மெயில் முகவரிக்கு அவர் மெயில் அனுப்பி உள்ளார். மேலும், முகநூல் மூலமாகவும் குறுஞ்செய்தி அனுப்பி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவர் ரோமன் சைனிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது.

இதற்கு ரோமன் சைனி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், அவருக்கு அறிவுரை வழங்கி உள்ளார். இருப்பினும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ரோமன் சைனிக்கு, சித்ரா கீதா தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்ளாவிட்டால் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்து கொல்வேன் என்று சித்ரா கீதா, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, ரோமன் சைனி, இந்திரா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளம்பெண்ணை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story