விழுப்புரம், காஞ்சீபுரம் மாவட்டத்தை கலக்கிய பிரபல கொள்ளையன் திண்டிவனத்தில் கைது
விழுப்புரம், காஞ்சீபுரம் மாவட்டங்களை கலக்கிய பிரபல கொள்ளையன் திண்டிவனத்தில் கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்து 45 பவுன் நகை மற்றும் ¾ கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டிவனம்,
திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டையை சேர்ந்தவர் ஷாகுசேன்(வயது 29). திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் 15–ந்தேதி அவரது தாயின் சிகிச்சைக்காக வீட்டை பூட்டிவிட்டு புதுச்சேரிக்கு சென்றார். பின்னர் அவர் மறுநாள் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 28¾ பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்த தகவலின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் காவேரிப்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நடந்து சென்று கொண்டிருந்த ஒரு வாலிபரை தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவன் காஞ்சீபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் கஸ்தூரி நகரை சேர்ந்த விஜயகுமார் மகன் சுந்தரமூர்த்தி (32) என்பது தெரிந்தது. மேலும் அவன் திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டையில் ஷாகுசேன் என்பவரின் வீட்டில் 28¾ பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சுந்தரமூர்த்தியை கைது செய்தனர். மேலும் அவனிடம் இருந்து 45 பவுன் நகை மற்றும், ¾ கிலோ வெள்ளி பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சுந்தரமூர்த்தியை கைது செய்து, நகையையும் பறிமுதல் செய்த திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமையிலான தனிப்படையை சேர்ந்த மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் பாண்டியன், ஏட்டுகள் அய்யப்பன், ராஜசெல்வம், செந்தில்முருகன், பூபாலன், பரந்தாமன், சுந்தர்ராஜ், தீபன்குமார், எல்லப்பன், பாரதிதாசன், ஸ்ரீகாந்த் ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டி பரிசு வழங்கினார்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறுகையில், தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட சுந்தரமூர்த்தி பிரபல கொள்ளையன் என்பதும். அவன் திண்டிவனம், விழுப்புரம், செஞ்சி பகுதி மற்றும் சென்னை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இவன் மீது சென்னை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் 15–க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டு, போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சுந்தரமூர்த்தி கைது செய்யப்பட்டு, அவனிடம் இருந்து நகை மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டிவனம் டாக்டர் கஜேந்திரன் மற்றும் ஜெரோம் ஆகியோரது வீடுகளில் 300 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மத்தியபிரதேசத்தை சேர்ந்த 2 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கொலை போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.