ரெயில் நிலையத்தில் வீச்சரிவாளுடன் சுற்றித்திரிந்த வழக்கில் மேலும் 2 கல்லூரி மாணவர்கள் கைது
பட்டாபிராம் இந்து கல்லூரி ரெயில் நிலையத்தில் வீச்சரிவாளுடன் சுற்றித்திரிந்த வழக்கில் மேலும் 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஆவடி,
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் கடந்த 6–ந் தேதி கையில் வீச்சரிவாளை வைத்துக்கொண்டு பட்டாபிராம் இந்து கல்லூரி மற்றும் நெமிலிச்சேரி ரெயில் நிலையங்களில் ஓடும் ரெயிலில் தொங்கியபடி பயணம் செய்து பிளாட்பாரத்தில் ரெயில் வரும்போது வீச்சரிவாளை பிளாட்பாரத்தில் தேய்த்துக்கொண்டு சென்றனர்.
மேலும் பயணிகளை ஆபாசமாக திட்டி மிரட்டியபடி சென்றனர். இதனை பார்த்த பயணிகள் அலறியபடி சிதறி ஓடினர். பின்னர் ரெயிலில் இருந்து இறங்கிய மாணவர்கள் பிளாட்பாரத்திலேயே பட்டாசு வெடித்து ரகளையில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ வைரலாக ‘வாட்ஸ்–அப்’ குரூப்பில் பரவியது.
இந்த நிலையில் இந்து கல்லூரி ரெயில் நிலையத்தில் வீச்சரிவாளுடன் சுற்றித்திரிந்ததாக மாநிலக்கல்லூரி மாணவர்கள் 4 பேரை நேற்று முன்தினம் பட்டாபிராம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முன்னதாக அந்த மாணவர்கள் 4 பேரும் போலீசாரிடம், ‘நாங்கள் தெரியாமல் செய்து விட்டோம். இதனால் எங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும். எங்களை மன்னித்து விடுங்கள், எங்கள் மீது வழக்கு போடாதீர்கள், இனிமேல் ரெயிலிலேயே போகமாட்டோம்’ என்று கதறி அழுதனர். இதுதொடர்பான காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கம் பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 19), திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த முகமது இப்ராகிம் (19) ஆகிய இருவரையும் நேற்று பட்டாபிராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி கைது செய்தார்.
பின்னர் அவர்களை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.