சொத்து தகராறில் பயங்கரம் தலையில் சிலிண்டரை போட்டு தந்தை கொலை மகன் கைது
சொத்து தகராறில் தலையில் சிலிண்டரை போட்டு தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஆனைக்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 60). இவருக்கு ராணி, முனியம்மா என்ற 2 மனைவிகள் உள்ளனர். ராணிக்கு வாசுதேவன் (39), சஞ்சீவி ஆகிய 2 மகன்கள் உள்ளனர். முனியம்மாவுக்கு குழந்தை இல்லை.
ராதாகிருஷ்ணனுக்கு அதே கிராமத்தில் 3½ ஏக்கர் விவசாய நிலமும், சொந்தமாக வீடும் உள்ளது. வாசுதேவன், தனது பங்கு சொத்தை பிரித்துத்தருமாறு தந்தை ராதாகிருஷ்ணனிடம் கேட்டு வந்தார். இதனால் தந்தை–மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் இரவும் சொத்து தகராறு தொடர்பாக அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த வாசுதேவன் தந்தை என்றும் பாராமல் ராதாகிருஷ்ணனை தாக்கி கீழே தள்ளினார். பின்னர் அருகில் இருந்த சிலிண்டரை தூக்கி அவரது தலை மீது போட்டார்.
இதில் படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணனை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஒரத்தி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து வாசுதேவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.