முன்விரோதத்தில் விவசாயி கொலை: கணவன்–மனைவிக்கு 4 ஆண்டு ஜெயில்
மதுரை எஸ்.அரசபட்டியை சேர்ந்தவர் குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அந்த சமயத்தில் இவரது மனைவி பாண்டிசெல்விக்கும், பக்கத்து வீட்டினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
மதுரை,
மதுரை பேரையூர் எஸ்.அரசபட்டியை சேர்ந்தவர் குமார்(வயது 34). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அந்த சமயத்தில் இவரது மனைவி பாண்டிசெல்விக்கும், பக்கத்து வீட்டினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்தநிலையில் 2014–ம் ஆண்டு குமார் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது பக்கத்து வீட்டினர் தன்னுடன் தகராறு செய்ததாகவும், இதுகுறித்து தட்டிக்கேட்குமாறும் குமாரிடம் அவரது மனைவி கூறினார். அதன்பேரில் பக்கத்து வீட்டுக்கு சென்று அங்கிருந்த விவசாயி செல்வத்திடம் அவர் தகராறில் ஈடுபட்டார். அப்போது தன் வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்த பாண்டிசெல்வி, அதை தனது கணவரிடம் கொடுத்து செல்வத்தை குத்துமாறு கூறினார். அவரும் கத்தியை வாங்கி செல்வத்தை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து கணவன்–மனைவி இருவரையும் பேரையூர் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு மதுரை 5–வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. முடிவில் கணவன்–மனைவியான குமார், பாண்டிசெல்வி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எஸ்.சமீனா தீர்ப்பளித்தார்.