கந்துவட்டி கேட்டு மிரட்டும் நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்


கந்துவட்டி கேட்டு மிரட்டும் நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 2 Nov 2017 9:25 PM GMT (Updated: 2 Nov 2017 9:24 PM GMT)

திருப்பூர் மண்ணரை பகுதியில் கந்துவட்டி கேட்டு மிரட்டும் நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் மனு ஒன்றை கொடுத்தார்.

திருப்பூர்,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கந்துவட்டி பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் கந்துவட்டிக்கு எதிரான நடவடிக்கையில் அரசும், போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பூர் மண்ணரை பாரபாளையம் பகுதியை சேர்ந்த சாந்தாமணி(வயது 35) என்பவர் தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் திருப்பூர் மாநகர கமி‌ஷனர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–

எனக்கு ரெஜி என்ற கணவரும், ஹரிகரன்(10), மிதுன்(7) என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2016–ம் ஆண்டு நவம்பர் மாதம் என்னுடைய கணவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அப்போது சிகிச்சைக்காக போதிய பணம் இல்லை. இதைத்தொடர்ந்து எங்கள் பகுதியை சேர்ந்த சந்திரமதி என்பவரிடம் என்னுடைய தங்க நகையை அடமானமாக வைத்து ரூ.30 ஆயிரத்தை வட்டிக்கு வாங்கினேன். இதற்கு வட்டியாக வாரம் ரூ.3 ஆயிரம் கொடுத்து வந்தேன். ஆனால் குடும்ப சூழல் காரணமாக ஒருசில மாதங்கள் கட்டவில்லை. இதனால் மாத வட்டியாக ரூ.4 ஆயிரத்து 500 ஆக வாரந்தோறும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கூறினார். பல்வேறு சிரமங்களுக்கு இடையில் இந்த பணத்தையும் கட்டி வந்தேன். ஆனால் கடந்த 3 மாதமாக என்னால் பணத்தை கட்ட இயலவில்லை.

இந்த நிலையில் வட்டி பணத்தை கட்ட இயலாததால் நான் வாங்கிய ரூ.30 ஆயிரத்தை திரும்ப செலுத்தி விடுகிறேன். எனது கம்மலை திரும்ப ஒப்படைத்து விடுங்கள் என்று அவரிடம் கேட்டேன். ஆனால் சந்திரமதி எனது நகையை திரும்ப தரமறுக்கிறார். மேலும், ரூ.65 ஆயிரம் கந்து வட்டியாக சந்திரமதி கேட்கிறார். மேலும், எனக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வருகின்றனர். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சென்று மனு கொடுத்தோம். போலீசாரும் எங்களை அழைத்து சந்திரமதிக்கு ஆதரவாக மிரட்டுகின்றனர். இதனால் எங்கள் மனு மீது முறையான விசாரணை மேற்கொண்டு, கந்துவட்டி கேட்டு மிரட்டும் சந்திரமதி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட கமி‌ஷனர் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story