ஐ.டி.ஐ. ஊழியர் கொலை வழக்கு: துப்புரவு தொழிலாளியிடம் 3 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி
ஐ.டி.ஐ. ஊழியர் கொலை வழக்கு: துப்புரவு தொழிலாளியிடம் 3 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி சேலம் கோர்ட்டு உத்தரவு.
சேலம்,
சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் அலுவலக உதவியாளராக இருந்தவர் கோபு (வயது 46). இவரை, அதே ஐ.டி.ஐ.யில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வந்த செல்வராஜ் என்பவர், அடித்து கொலை செய்துவிட்டதாகவும், அவரது உடலை தீ வைத்து எரித்து குப்பை தொட்டியில் போட்டதாகவும் கன்னங்குறிச்சி போலீசாரிடம் தெரிவித்தார். ஆனால் கோபுவின் உடலை போலீசார் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் செல்வராஜ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில், செல்வராஜை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கன்னங்குறிச்சி போலீசார் அனுமதிகேட்டு சேலம் 4–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். நேற்று இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) சண்முகப்பிரியா, செல்வராஜை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கன்னங்குறிச்சி போலீசாருக்கு அனுமதி அளித்தார். விசாரணைக்கு பின் வருகிற 6–ந் தேதி கோர்ட்டில் மீண்டும் அவரை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்டு கூறியுள்ளார். அதன்பேரில், கோபு கொலை வழக்கு தொடர்பாக செல்வராஜை கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.