போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வந்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முயற்சிப்பதா? கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த 23 பேர் கைது
நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி போலீஸ்நிலையத்தில் கையெழுத்திட வந்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முயற்சிப்பதாக குற்றம் சாட்டி திருச்சி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த 23 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி,
மதுரை திருநகரை சேர்ந்தவர் வழக்கறிஞர் மகாராஜன். நேதாஜி சுபாஷ் சேனை என்ற அமைப்பின் தலைவராக உள்ள இவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். கலெக்டர் அலுவலக வாசலில் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினார்கள்.
பொதுமக்கள் பிரச்சினை தொடர்பாக கலெக்டரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்பது பொதுவான விதிமுறை. அந்த அடிப்படையில் தான் வந்து உள்ளேன். என்னை அனுமதியுங்கள் என்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கண்டோன்மெண்ட் சரக உதவி போலீஸ் கமிஷனர் சச்சிதானந்தம் இங்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. அதனால் கும்பலாக சென்று கலெக்டரை சந்திக்க அனுமதிக்க முடியாது என்றார். இதனால் அவருக்கும் போலீஸ் உதவி கமிஷனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து வழக்கறிஞர் மகாராஜன் உள்பட 23 பேரை போலீசார் கைது செய்து ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வழக்கறிஞர் மகாராஜன் கலெக்டரிடம் கொடுப்பதற்காக வைத்திருந்த மனுவில் ‘திருச்சி கல்லணை சாலையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நிபந்தனை ஜாமீனில் வெளி வந்து கடந்த 3–ந்தேதி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட சென்றனர். அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் ஆயுதங்கள் வைத்து இருந்ததாகவும், கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்ததாகவும் பொய் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவர்கள் மீது போலீஸ் கமிஷனர் தூண்டுதல் படி குண்டாஸ் போடவும் முயற்சி செய்யப்படுகிறது. எனவே இதுபற்றி சி.பி.சி.ஐ.டி. அல்லது சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்த வேண்டும். போலீஸ் கமிஷனர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது.