சசிகலாவுக்கு பினாமி பெயரில் சொத்துகள் உள்ளதா? ‘கிரீன் டீ’ எஸ்டேட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை


சசிகலாவுக்கு பினாமி பெயரில் சொத்துகள் உள்ளதா? ‘கிரீன் டீ’ எஸ்டேட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 12 Nov 2017 11:15 PM GMT (Updated: 12 Nov 2017 6:52 PM GMT)

‘கிரீன் டீ’ எஸ்டேட்டில் நேற்று 4–வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது அவர்கள் சசிகலாவுக்கு பினாமி பெயரில் சொத்துகள் உள்ளதா? என்று விசாரணை நடத்தினார்கள்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 9–ந் தேதி காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து கோடநாடு எஸ்டேட் பொது மேலாளர் நடராஜனை அழைத்துக்கொண்டு கோடநாடு எஸ்டேட் அருகிலுள்ள சசிகலாவுக்கு சொந்தமான கிரீன் டீ எஸ்டேட்டுக்கு சென்றனர்.

அங்கு பொது மேலாளர் நடராஜன் மற்றும் கிரீன் டீ எஸ்டேட் மேலாளர், எஸ்டேட் அலுவலர்கள், மற்றும் தொழிலாளர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அலுவலகங்களில் தீவிர சோதனை நடத்தினார்கள். கோடநாடு மற்றும் கிரீன் டீ எஸ்டேட் தொழிலாளர்களின் வங்கி கணக்குகள் உள்ள ஈளாடா வங்கிக்கு சென்று வங்கி மேலாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். வங்கியில் எஸ்டேட் சம்பந்தமான வரவு, செலவு கணக்குகளை பார்வையிட்டனர்.

தொடர்ந்து 3 நாட்களாக கிரீன் டீ எஸ்டேட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள், 5 பேர் சோதனை நடத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து 3 உயர் அதிகாரிகள் ஒரு காரில் கிரீன் டீ எஸ்டேட்டுக்கு வந்தனர். அவர்கள் அங்குள்ள அலுவலகத்தில் சோதனை நடத்தியதுடன், பொது மேலாளர் நடராஜனிடம் விசாரித்தனர். இந்த சோதனை இரவு 10.30 மணிவரை நடைபெற்றது. பின்னர் அதிகாரிகள் 2 கார்களில் எஸ்டேட்டைவிட்டு வெளியே வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு ஒரு காரில் 3 அதிகாரிகளும், 9.30 மணிக்கு மற்றொரு காரில் 4 வருமான வரித்துறை அதிகாரிகளும் மீண்டும் கிரீன் டீ எஸ்டேட்டுக்கு சென்று 4–வது நாளாக சோதனை நடத்தினர். கூடலூரை சேர்ந்த மர வியாபாரி சஜீவன், கோடநாடு எஸ்டேட்டில் பர்னிச்சர் வேலைகளை செய்து கொடுத்துள்ளார். இதனால் அவருக்கும், எஸ்டேட் பொது மேலாளர் நடராஜனுக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது?, அவர்களுக்குள் இடையே உள்ள தொடர்பு என்ன? என்பது உள்பட பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

மேலும் சசிகலாவுக்கு வேறு ஏதேனும் சொத்து உள்ளதா? பினாமி பெயரில் சொத்துகள் சேர்த்து உள்ளாரா? என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கிரீன் டீ எஸ்டேட்டில் இன்றும் (திங்கட்கிழமை) தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நடைபெறும் என தெரிகிறது. சென்னையில் இருந்து உயர் அதிகாரிகள் வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வருமான வரி சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்களை பத்திரமாக கொண்டு செல்லவே உயர் அதிகாரிகள் வந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

கடந்த 4 நாட்களாக தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தாலும் கோடநாடு மற்றும் கிரீன் டீ எஸ்டேட்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் வழக்கம் போல் தங்களது பணிகளில் ஈடுபட்டிருந்தனர். எஸ்டேட்டின் வழக்கமான பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. மேலும் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் உள்ளூரில் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் தினமும் வந்து கிரீன் டீ எஸ்டேட் நுழைவு வாயில் முன் காலை முதல் அதிகாரிகள் திரும்பும் வரை காத்திருக்கிறார்கள்.


Next Story