சட்டசபையின் கண்ணியத்தை மீறியதாக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது உரிமை மீறல் புகார்


சட்டசபையின் கண்ணியத்தை மீறியதாக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது உரிமை மீறல் புகார்
x
தினத்தந்தி 17 Nov 2017 10:15 PM GMT (Updated: 17 Nov 2017 9:00 PM GMT)

சட்டசபையின் கண்ணியத்தை மீறும் வகையில் செயல்பட்டதாக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது உரிமை மீறல் புகாரினை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான தீப்பாய்ந்தான், விஜயவேணி ஆகியோர் கொடுத்துள்ளனர்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதம் 16–ந்தேதி நடந்தது. அன்றைய தினம் சட்டமன்ற கூட்டத்தில், மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளதாக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான அசோக் ஆனந்து, என்.எஸ்.ஜே.ஜெயபால் ஆகியோர் குற்றஞ்சாட்டினார்கள்.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே காரசார கருத்து மோதல் நடந்தது. இதைத்தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் மைக் இணைப்பினை சபாநாயகர் வைத்திலிங்கம் துண்டிக்க உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து சபையை விட்டு வெளியே வந்த அசோக் ஆனந்து எம்.எல்.ஏ., வெளியிலிருந்து மைக்குடன் கூடிய மெகாபோனை எடுத்து வந்து சபையில் பேசினார். அந்த மெகாபோனை என்.எஸ்.ஜே.ஜெயபால் எம்.எல்.ஏ.வும் பயன்படுத்தி பேசினார். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மெகாபோனை பறிமுதல் செய்த சபாநாயகர் வைத்திலிங்கம் அவர்களை சபையிலிருந்து ஒருநாள் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே வருகிற 23–ந்தேதி புதுவை சட்டசபை கூட உள்ளது. இந்தநிலையில் சட்டமன்றத்தில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான அசோக் ஆனந்து, என்.எஸ்.ஜே.ஜெயபால் ஆகியோர் நடந்துகொண்ட விதம் குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான தீப்பாய்ந்தான், விஜயவேணி ஆகியோர் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் கொடுத்துள்ளனர்.

அந்த புகாரில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான அசோக் ஆனந்து, தீப்பாய்ந்தான் ஆகியோர் சபையின் கண்ணியத்தை மீறி செயல்பட்டதாகவும், அருவெறுக்கத்தக்க வகையில் நடந்துகொண்டதாகவும், சபாநாயகரை அவமதிக்கும் வகையில் செயல்பட்டதாகவும், சபையில் தரக்குறைவாக பேசியதாகவும் கூறியுள்ளனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் பெறப்பட்ட புகாரை சபாநாயகர் வைத்திலிங்கம், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையிலான உரிமைக்குழுவுக்கு அனுப்பி வைக்க உள்ளார். அதன்பின் உரிமைக்குழு கூடி விசாரித்து அவர்கள் மீது எத்தகையை நடவடிக்கை எடுப்பது என்பதை முடிவு செய்யும்.


Next Story