கடலில் விழுந்த மீனவரின் உடலை மீட்கக்கோரி ராமேசுவரத்தில் கிராம மக்கள் போராட்டம்


கடலில் விழுந்த மீனவரின் உடலை மீட்கக்கோரி ராமேசுவரத்தில் கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 18 Nov 2017 11:30 PM GMT (Updated: 18 Nov 2017 6:43 PM GMT)

கன்னியாகுமரி கடலில் விழுந்த மீனவரின் உடலை மீட்கக்கோரி ராமேசுவரம் மீன்துறை அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் ஏரகாடு அருகே உள்ள குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த மீனவர் செந்தில்குமார் (வயது 37). இவருக்கு திருணம் முடிந்து மனைவி மாரியம்மாள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். இவர் கன்னியாகுமரி தேங்காய்பட்டினம் பகுதியில் தங்கிஇருந்து கடலில் மீன் பிடிக்க சென்று வந்தார். அங்கு கடந்த சில நாட்களுக்குமுன் விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற செந்தில்குமார் கடலில் தவறி விழுந்து பலியானார்.

இந்நிலையில் கன்னியாகுமரி தேங்காய்பட்டினம் கடலில் விழுந்த மீனவரின் உடலை தேட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை கண்டித்தும், கூடுதல் படகுகள் மற்றும் ஹெலிகாப்டரில் மீனவரின் உடலை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாடு மீன் பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாவட்டசெயலாளர் கருணாமூர்த்தி தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் தாலுகா செயலாளர் சிவா, ஏரகாடு கிராம நிர்வாகி தியாகராஜன் மற்றும் ராமேசுவரம் குடியிருப்பு மீனவ கிராமமக்கள் 100–க்கும் மேற்பட்டோர் மீன் துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் நகர் போலீஸ் நிலைய சப்–இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், நடராஜன், தனிப்பிரிவு காவலர் மாணிக்கம் ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து மீனவரின் குடும்பத்தினர் உள்ளிட்ட 10 பேர் மீன்துறை உதவி இயக்குனர் மணிகண்டனிடம் மனு கொடுத்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட மீன்துறை அதிகாரி, மாவட்ட கலெக்டர் மூலமாக அரசுக்கு தகவல் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story