மணல் கடத்திய 21 பேர் கைது 4 லாரிகள், 17 மாட்டு வண்டிகள் பறிமுதல்


மணல் கடத்திய 21 பேர் கைது 4 லாரிகள், 17 மாட்டு வண்டிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 19 Nov 2017 10:15 PM GMT (Updated: 19 Nov 2017 9:53 PM GMT)

நெல்லிக்குப்பம், ரெட்டிச்சாவடி, புவனகிரி பகுதிகளில் மணல் கடத்திய 21 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 லாரிகள், 17 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அருகே நடுவீரப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது திருமாணிக்குழி கிராமத்தில் மணல் ஏற்றி வந்த மாட்டுவண்டிகளை மறித்து, அதை ஓட்டி வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், எம்.புதூரை சேர்ந்த கஜேந்திரன்(வயது 41), சிவநாதன்(55), அரசடிக்குப்பம் முத்துராமன்(47), கிழக்குராமாபுரம் கண்ணதாசன்(31), வெள்ளக்கரை ஜெயக்குமார்(34), குறவன்பாளையம் சுந்தரமூர்த்தி(37), பச்சையப்பன்(55), விலங்கல்பட்டு சண்முகமூர்த்தி(50), குழந்தைகுப்பம் பரமசிவம்(40) ஆகியோர் என்பதும், திருமாணிக்குழி கெடிலம் ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்த பயன்படுத்திய 9 மாட்டுவண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கீழ்புவனகிரி வெள்ளாற்றில் இருந்து மாட்டுவண்டிகளில் மணல் கடத்தி வந்த தம்பிக்குநல்லான்பட்டினம் கிராமத்தை சேர்ந்த அன்பழகன்(65), ஆதிவராகநல்லூர் ராஜாஜி(50), ராஜ்குமார், மேல்புவனகிரி ராஜேஷ்(24) ஆகியோரை புவனகிரி போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணபிரியா தலைமையிலான போலீசார் மேலப்பாளையம் இலுப்பைத்தோப்பு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கெடிலம் ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த அசோக்(வயது32), ரமேஷ்(34) ஆகியோரை கைது செய்தனர், 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். இதேபோல் கீழிருப்பு கிராமத்தில் கெடிலம் ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த ரத்தினவேல்(46), ஜெயசிங்(55) ஆகியோரை காடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டைமண்ட் துரை கைது செய்து, 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தார்.

இதேபோல் ரெட்டிச்சாவடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையிலான போலீசார் சின்னகங்கணாங்குப்பத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த 4 லாரிகளை மறித்து டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், வானூரை சேர்ந்த ராதா கிருஷ்ணன்(42), கமலகண்ணன்(27), மணிவண்ணன் (40), கிளியனூரை சேர்ந்த சரவணன்(35) ஆகியோர் என்பதும், கடலூர் பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 4 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 

Next Story