பல்லடம் அருகே பனியன் நிறுவனத்திற்குள் புகுந்து தொழிலதிபரின் தந்தையை கொன்ற வழக்கில் 4 பேர் கைது
பல்லடம் அருகே பனியன் நிறுவனத்திற்குள் புகுந்து தொழில் அதிபரின் தந்தையை கொன்ற வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொங்கலூர்,
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம், திருமலை நகரை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 37). தொழில் அதிபர். இவர் கவுண்டம்பாளையம்புதூரில் கடந்த 12 ஆண்டுகளாக பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இந்த பனியன் நிறுவனத்தில் தினசரி இரவு நேரத்தில் இளங்கோவனின் தந்தை முத்துசாமி (65) சென்று படுத்துக்கொள்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 12–ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பனியன் நிறுவனத்திற்கு விடுமுறை என்பதால் தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை. இதனால் அன்று இரவு முத்துசாமி பனியன் நிறுவனத்தில் படுக்க சென்றுள்ளார்.
அடுத்த நாள் 13–ந் தேதி காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்துள்ளனர். அப்போது பனியன் நிறுவனத்தின் உள்ளே முத்துசாமி கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் பனியன் நிறுவனத்தில் வைக்கப்பட்டு இருந்த பனியன்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளாளர்கள் இளங்கோவனுக்கும், பல்லடம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். இளங்கோவனின் பனியன் நிறுவனத்திற்குள் நள்ளிரவில் நுழைந்த கொள்ளையர்கள் முத்துசாமியின் கை மற்றும் கால்களை கட்டி, அவரை கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்து விட்டு, அங்கிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான பனியன்களை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கொலையாளிகளை பிடிக்க பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துசாமி மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொலை, கொள்ளை நடந்த சமயத்தில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி அருகே திருப்பூர் பதிவு எண் கொண்ட வேன் ஒன்று திருட்டு போனதாக திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் பதிவாகியிருந்தது.
இதில் சந்தேகம் அடைந்த தனிப்படை போலீசார் வேன் திருட்டுக்கும், கொலை மற்றும் பனியன் துணிகள் கொள்ளை சம்பவத்துக்கும் தொடர்பு இருக்குமோ? என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டனர். மேலும் கொலை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் போட்டு பார்த்தனர். அப்போது ஏற்கனவே திருப்பூரில் திருட்டுப்போன வேன், இளங்கோவனின் பனியன் நிறுவனத்திற்கு வந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இதையடுத்து முதற்கட்டமாக திருட்டுபோன வேனை கண்டு பிடிக்கும் முயற்சியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர். அப்போது அந்த வேன் திருச்சியை அடுத்த தோகைமலையில் நிற்பது கண்டு பிடிக்கப்பட்டது. அப்போது சிந்தாமணிபட்டி அருகே இனாம்குளத்தூரில் சாயப்பட்டறை இருப்பதும், அங்கு பல்லடத்தில் கொள்ளைபோன பனியன்கள் பதுக்கி வைத்து இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த சாயப்பட்டறையை சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை செய்தபோது, சிந்தாமணிபட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் இதற்கு முன்பு பால்வேன் ஓட்டியதாகவும், அவர் மூலமாக பனியன்கள் இங்கு கொண்டு வந்து பதுக்கி வைத்து இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் முதலில் சுரேசை (31) கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் திருப்பூர் வீரபாண்டி வஞ்சி நகரில் குடியிருந்து வரும் நபர்களான, புதுக்கோட்டை மாவட்டம், அங்குராப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் முருகன்(33), தென்னலூரை சேர்ந்த சின்னதுரை என்பவரது மகன் பாரதி(27), வையத்தூர், மூட்டாம்பட்டியை சேர்ந்த கண்ணுசாமி என்பவரது மகன் குமாரவேல்(31) ஆகியோரையும் கைது செய்தனர்.
விசாரணையில் இந்த கும்பலுக்கு முருகன்தான் தலைவராக இருந்து வந்து ள்ளார். இவர் திருப்பூரில் தங்கி இருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருவதால், எந்தெந்த பனியன் நிறுவனத்தில் பனியன் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது? அந்த பனியன் நிறுவனத்தில் பாதுகாப்பு எப்படி? எத்தனை பேர் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்? என்று தெரிந்து வைத்துள்ளார். அதன்படி சம்பவத்தன்று இளங்கோவனின் பனியன் நிறுவனத்திற்கு 4 பேரும் சென்று அங்கு படுத்து இருந்த முத்துசாமியை கொலை செய்து அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான பனியன்களை கொள்ளையடித்து சென்று இருப்பது விசாரணையில் தெரிவந்துள்ளது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் கொள்ளைக்கு பயன்படுத்திய வேன் மற்றும் கொள்ளையடித்து சென்ற பனியன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பல்லடம் அருகே தொழில் அதிபரின் தந்தையை கொன்று துணிகளை கொள்ளையடித்து சென்ற வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.