குன்றத்தூர் அருகே டெம்போ மீது மொபட் மோதல்; கல்லூரி மாணவர்கள் பலி


குன்றத்தூர் அருகே டெம்போ மீது மொபட் மோதல்; கல்லூரி மாணவர்கள் பலி
x
தினத்தந்தி 22 Nov 2017 10:45 PM GMT (Updated: 2017-11-23T03:59:49+05:30)

குன்றத்தூர் அருகே சாலையோரம் நின்ற டெம்போ மீது மொபட் பயங்கரமாக மோதியது. இதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர், அங்காள பரமேஸ்வரி நகரை சேர்ந்தவர் புவனேஷ் (வயது 19). இவர், மாங்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார்.

இதேபோல் குன்றத்தூர், கன்னியப்பன் நகரைச் சேர்ந்தவர் அரிகரன் (19). சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார். இவர் சபரிமலைக்கு செல்வதற்காக மாலை அணிந்து இருந்தார். புவனேசும், அரிகரனும் நண்பர்கள்.

நேற்று காலை நண்பர்கள் இருவரும் ஒரு மொபட்டில் வண்டலூர்–மீஞ்சூர் வெளிவட்டசாலையில் சென்று கொண்டு இருந்தனர். மொபட்டை புவனேஷ் ஓட்டினார். அவருக்கு பின்னால் அரிகரன் அமர்ந்து இருந்தார்.

குன்றத்தூர் அடுத்த தெற்கு மலையம்பாக்கம் அருகே சென்றபோது, அங்கு பழுதடைந்த ஒரு டெம்போவை சாலையோரம் நிறுத்திவிட்டு அதனை சரி செய்யும் பணியில் டிரைவர் ஈடுபட்டு இருந்தார். மொபட்டை புவனேஷ் வேகமாக ஓட்டி வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த மொபட், எதிர்பாராதவிதமாக சாலையோரம் நிறுத்தி இருந்த டெம்போவின் பின்புறம் பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் மொபட் நொறுங்கியது. தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பலியான புவனேஷ், அரிகரன் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து டெம்போ டிரைவர் ராஜசேகரை (37) கைது செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story