பெருந்துறை சார்பதிவாளரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணை


பெருந்துறை சார்பதிவாளரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணை
x
தினத்தந்தி 1 Dec 2017 10:15 PM GMT (Updated: 1 Dec 2017 7:40 PM GMT)

பெருந்துறை சார்பதிவாளரிடம் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தினார்கள். பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

பெருந்துறை,

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அக்ரஹார வீதியில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஈரோடு திண்டலை சேர்ந்த அமுதா (வயது 55). அங்கு சார்பதிவாளராக வேலை பார்த்து வருகிறார்.

பெருந்துறை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்கள் பதிவு செய்யும்போது, அதிக அளவில் லஞ்சம் பெறப்படுவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் ஈரோட்டில் இருந்து 6 அதிகாரிகள் பெருந்துறை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு காரில் சென்றார்கள். அப்போது அலுவலகத்தில் இருந்து காரில் சார்பதிவாளர் அமுதா வெளியே வந்துகொண்டு இருந்தார். காரை அவருடைய மகன் ஓட்டினார். அப்போது அலுவலக வாசலில் அமுதா காரை நிறுத்த சொல்லி, மோட்டார்சைக்கிளில் அங்கு வந்த ஒருவரிடம் கவர் ஒன்றை வாங்கினார்.

உடனே அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அமுதாவின் காரை சுற்றுவளைத்தார்கள். மேலும் காரை திரும்பி அலுவலகத்துக்கே ஓட்டி வரவைத்தார்கள். அதன்பின்னர் அலுவலகத்தின் அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து அமுதாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அவர் வைத்திருந்த கவரையும் பிரித்து பார்த்தார்கள். அதில் ரூ.45 ஆயிரம் இருந்ததாக தெரியவருகிறது. நள்ளிரவு 1½ மணி வரை அமுதாவிடம் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். அதன்பின்னர் அங்கிருந்து காரில் ஈரோடு சென்றுவிட்டார்கள். சார்பதிவாளர் அமுதாவிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தது லஞ்சப்பணமா? அவர் மீது குற்றச்சாட்டு உள்ளதா? என்று எதுவும் தெரியவில்லை. ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேற்றும் அமுதாவிடம் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது.


Next Story