ரூ.3,500 லஞ்சம் பெற்றதாக மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட 3 பேர் கைது
ரூ.3,500 லஞ்சம் பெற்றதாக செங்குன்றம் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட 3 பேரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.
செங்குன்றம்,
சென்னையை அடுத்த செங்குன்றத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர், சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிறுவனத்துக்கு சொந்தமான காரை கியாஸ் வாகனமாக மாற்றுவதற்கு அனுமதி சான்று பெற செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தரகராக செயல்பட்ட மோகன்ராஜ் என்பவரை அணுகினார்.
அப்போது அனுமதி சான்றிதழ் பெற ரூ.3,500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகேசன் இதுபற்றி லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை முருகேசனிடம் கொடுத்து, அதை மோகன்ராஜிடம் லஞ்சமாக கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.
அந்த பணத்தை பெற்றுக்கொண்ட முருகேசன், செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்று மோகன்ராஜிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு குமரகுரு தலைமையிலான 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், அதிரடியாக வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குள் புகுந்து சோதனை மேற்கொண்டனர்.
இதையடுத்து முருகேசனிடம் இருந்து ரூ.3,500 லஞ்சம் பெற்றதாக மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், ஊழியர் பிரகாஷ் மற்றும் தரகர் மோகன்ராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 3 பேரையும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.