சிறுமியை கற்பழித்து கொன்றவர் பெற்ற தாயை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தார்


சிறுமியை கற்பழித்து கொன்றவர் பெற்ற தாயை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தார்
x
தினத்தந்தி 3 Dec 2017 5:30 AM IST (Updated: 3 Dec 2017 4:55 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கற்பழித்து எரித்து கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபர் செலவுக்கு பணம் தராததால் தனது தாயை கொலை செய்து 25 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றார்.

பூந்தமல்லி,

திருவள்ளூர் மாவட்டம் மாங்காட்டை அடுத்த மவுலிவாக்கம், மாதா நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்தவர் பாபு(வயது 35). பெருங்களத்தூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். இவரது மனைவி ஸ்ரீதேவி, மகள் ஹாசினி(6), மகன் தேஜஸ்(4).

பிப்ரவரி 6–ந்தேதி சிறுமி ஹாசினியை அதே குடியிருப்பில் வசித்துவந்த தஷ்வந்த்(24) கற்பழித்து கொலை செய்துவிட்டு, உடலை அனகாபுத்தூர் அருகே ஒரு இடத்தில் வைத்து எரித்துவிட்டார். தஷ்வந்தை மாங்காடு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர் குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த செப்டம்பர் மாதம் தஷ்வந்த் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ஐகோர்ட்டு ரத்துசெய்து ஜாமீனில் விடுவித்தது.

இதற்கு ஹாசினியின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அந்த வீட்டை காலி செய்துவிட்டு, குன்றத்தூர், சம்பந்தம் நகர், ஸ்ரீராம் சாலையில் உள்ள ஒரு வீட்டில் தஷ்வந்த் அவரது பெற்றோர் சேகர்(65), சரளா (54) ஆகியோர் வசித்துவந்தனர். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வுபெற்ற சேகர், தற்போது கிண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார்.

சேகர் நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் தஷ்வந்த் அவரது தாய் சரளா ஆகியோர் இருந்தனர். மதியம் தஷ்வந்துக்கு அவரது தந்தை போன் செய்தபோது வெளியே இருப்பதாக கூறினார். இதனால் சேகர் மனைவிக்கு போன் செய்தார். ஆனால் சரளா செல்போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்தார்.

மீண்டும் மகனுக்கு போன் செய்தபோது அவர் எடுக்கவில்லை. உறவினர்களும் போன் செய்ததால் சிறிது நேரத்தில் தனது செல்போனை சுவிட்ச்–ஆப் செய்துவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வெளிப்புறமாக பூட்டு போட்டு இருந்தது.

இரும்புக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் சரளா தலையில் தாக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்து இருந்த தாலி சங்கிலி, வளையல், மோதிரம் உள்ளிட்ட நகைகளும் இல்லாததைக்கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போரூர் உதவி கமி‌ஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோர் தலைமையில் விரைந்துவந்த போலீசார் சரளா உடலை பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். துணை கமி‌ஷனர் சர்வேஷ்ராஜ் விரைந்துவந்து விசாரணை நடத்தினார்.

ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் போதைக்கு அடிமையாகி அடிக்கடி செலவுக்கு தனது பெற்றோரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துவந்தார். நேற்று காலையும் தனது தாயிடம் ரூ.20 ஆயிரம் கேட்டு தொந்தரவு செய்தார். பணம் கொடுக்காத ஆத்திரத்தில் தாயின் தலையில் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு, சுமார் 25 பவுன் நகையை எடுத்துக்கொண்டு வீட்டை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டது தெரிந்தது.

தலைமறைவான தஷ்வந்தை போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். மோப்ப நாய் ஜூலி மோப்பம் பிடித்துக்கொண்டு சிறிது தூரம் வரை சென்று நின்றுவிட்டது. கைரேகை நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர்.

தஷ்வந்த் சிறுமி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டபோது, அவரது பெற்றோர் சொத்தை விற்று வழக்குக்காக செலவு செய்தனர். சொத்துகளை விற்றாவது மகனை மீட்கவும் முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story