புஞ்சைபுளியம்பட்டியில் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த தொழிலாளி போலீஸ் விசாரணை


புஞ்சைபுளியம்பட்டியில் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த தொழிலாளி போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 4 Dec 2017 3:15 AM IST (Updated: 4 Dec 2017 1:13 AM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டியில் உடல் எரிந்த நிலையில் தொழிலாளி பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புஞ்சைபுளியம்பட்டி,

கர்நாடக மாநிலம் செட்டகிரி மாவட்டம் கதகு தாலுகா தாசரனானியை சேர்ந்தவர் முகமதுஹவுஸ் (வயது 57). இவர் கடந்த சில ஆண்டுகளாக புஞ்சைபுளியம்பட்டி செங்குந்தபுரத்தில் வாடகை வீட்டில் தங்கிக்கொண்டு, அங்குள்ள ஒரு தனியார் நூற்பாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

முகமதுஹவுசுக்கு அவ்வப்போது வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை என்று தெரியவருகிறது.

இந்தநிலையில் புஞ்சைபுளியம்பட்டி தொலைபேசி அலுவலகத்துக்கு எதிரே உள்ள ஒரு காலி இடத்தில் நேற்று அதிகாலை 5 மணி அளவில், உடல் எரிந்த நிலையில் முகமதுஹவுஸ் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அதை பார்த்து அதிர்ந்துபோய், புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள்.

அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். உடல் அருகே முகமதுஹவுசின் சைக்கிளும், அதன் அருகே மண்எண்ணை கேனும் கிடந்தது. அதைத்தொடர்ந்து உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்கள்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட முகமதுஹவுஸ் வாழ்க்கையில் வெறுப்படைந்து, தானே உடலில் மண்எண்ணையை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது அந்த வழியாக சைக்கிளில் வந்த அவரை யாராவது தடுத்து அவர் மீது மண்எண்ணையை ஊற்றி கொலை செய்தார்களா? என்று தெரியவில்லை.

முகமுதுஹவுஸ் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்திருந்தால், அவர் ஏன் தான் தங்கியிருக்கும் இடத்தை விட்டு தொலைபேசி அலுவலகம் அருகே வந்தார் என்றும் தெரியவில்லை. இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நூற்பாலை தொழிலாளி ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தது நேற்று அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story