சுரங்கம் தோண்டி வங்கியில் கொள்ளை: பெண்கள் உள்பட 11 பேர் கைது ரூ.3½ கோடி நகைகள் பறிமுதல்
நவிமும்பையில் சுரங்கம் தோண்டி வங்கியில் கொள்ளையடித்த சம்பவத்தில் 2 பெண்கள் உள்பட மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மும்பை,
நவிமும்பையில் சுரங்கம் தோண்டி வங்கியில் கொள்ளையடித்த சம்பவத்தில் 2 பெண்கள் உள்பட மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.3½ கோடி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
வங்கியில் கொள்ளைநவிமும்பை ஜூயி நகரில் உள்ள பரோடா வங்கி கிளைக்குள் கடந்த மாதம் சுரங்கம் அமைத்து புகுந்த கொள்ளை கும்பல் அங்கிருந்த 30 லாக்கர்களை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் நவிமும்பையில் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது. கொள்ளையர்களை பிடிப்பதற்காக 10 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
11 பேர் கைதுபோலீசார் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக மொத்தம் 11 பேரை கைது செய்து உள்ளனர். இவர்களில் 7 பேர் மும்பையில் கைது செய்யப்பட்டனர். உத்தரபிரதேசம், மேற்கு வங்க மாநிலத்திலும் சிலர் சிக்கினார்கள். கைதானவர்களில் இரண்டு பேர் பெண்கள்.
கைதானவர்கள் பெயர் விவரம் வருமாறு:– ஷிராவன் கிருஷ்ணா, மொகின் கான், ஹாஜிஅலி மிஸ்ரா பேக், அஞ்சான் ஆனந்த் உர்ப், சஞ்சய் வாக், மொகிதீன் சேக், கிஷான் மிஸ்ரா, சுபம் வர்மா, ஆதேஷ் வர்மா, மெஹருனிஷா, சந்தோஷ் கதம் ஆகியோர் ஆவர்.
நகைகள் பறிமுதல்அவர்களிடம் இருந்து ரூ.3 கோடியே 43 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், ரூ.1 கோடியே 38 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இதுதவிர அவர்கள் பூமிக்கடியில் சுரங்கம் தோண்ட பயன்படுத்திய கருவிகள், ஆயுதங்கள் 4 கார்கள் உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.