போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தாக்கியதில் கல்லூரி மாணவரின் செவித்திறன் பாதிப்பு
ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் சென்ற போது, அதில் ஒரு மாணவரை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தாக்கினார். இதில் அந்த மாணவரின் செவித்திறன் பாதிக்கப்பட்டு உள்ளது.
கோவை,
ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் சென்ற போது, அதில் ஒரு மாணவரை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தாக்கினார். இதில் அந்த மாணவரின் செவித்திறன் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
கோவை நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது 18). கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் தன்னுடன் படித்து வரும் தனது நண்பர்களான மிதுன் (18), முத்துக்குமார் (19) ஆகியோருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் காலையில் கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள வைதேகி நீர்வீழ்ச்சியை பார்ப்பதற்காக சென்றார்.
இந்த நீர்வீழ்ச்சி அடர்ந்த வனப்பகுதிக்குள் இருப்பதாலும், அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி கிடையாது என்பதாலும், அவர்களை வனப்பகுதி அடிவாரத்தில் உள்ள சோதனைச்சாவடியில் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் நீர்வீழ்ச்சிக்கு செல்ல முடியாத அவர்கள் 3 பேரும், சோதனை சாவடியின் அருகே செல்லும் நீர்வீழ்ச்சியின் ஓடையில் குளித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மாலை 5 மணிக்கு கோவை திரும்பினார்கள். மோட்டார் சைக்கிளை தினேஷ் ஓட்ட, பின்னால் மிதுன், முத்துக்குமார் அமர்ந்து இருந்தனர். அவர்கள் 3 பேரும் தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையம் அருகே வந்தபோது, அங்கு சப்–இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினார்கள்.
இதனால் பயமடைந்த மாணவர்கள் போலீசாரின் அருகே நிறுத்தாமல், சிறிது தூரம் தள்ளிச்சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்தியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சப்–இன்ஸ்பெக்டர் மாதவன், அந்த மாணவர்களை திட்டி உள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த சப்–இன்ஸ்பெக்டர் மாதவன், திடீரென்று மாணவர் மிதுன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதில் அவருடைய வலது காதில் இருந்து ரத்தம் வழிந்தது. இதை பார்த்ததும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அந்த சப்–இன்ஸ்பெக்டரிடம் ஏன் அந்த மாணவரை இப்படி அடித்தீர்கள்? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலில் நிலைகுலைந்த மிதுனை, தினேஷ், முத்துக்குமார் ஆகியோர் மீட்டு தொண்டாமுத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச்சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த தாக்குதல் காரணமாக மிதுனின் செவித்திறன் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தினேசுக்கு, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தது, ஹெல்மெட் அணியாமல் வந்தது, ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தது, ஓட்டுனர் உரிமம் இல்லாதவருக்கு வாகனத்தை ஓட்ட கொடுத்தது, மோட்டார் சைக்கிளுக்கு இன்சூரன்சு இல்லாதது ஆகிய 5 பிரிவுகளின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. அந்த அபராதத்துக்கான தொகையை கோர்ட்டில் கட்டுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எங்களுக்கு புகார் வரவில்லை. எனினும் இதுதொடர்பாக புகார் அளிக்கும்படி பாதிக்கப்பட்ட மாணவரிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புகார் அளித்த பின்னர் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட சப்–இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றவரை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் லத்தியால் தாக்கினார். இதில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த சப்–இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுபோல கோவையிலும் சப்–இன்ஸ்பெக்டரால் மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.