கூடுதல் வட்டி கேட்டு கொலை மிரட்டல் கலெக்டரிடம் பெண் புகார்
விருதுநகர் காந்திபுரம் தெருவை சேர்ந்த செண்பகவள்ளி.
விருதுநகர்,
விருதுநகர் காந்திபுரம் தெருவை சேர்ந்த செண்பகவள்ளி (வயது 38) என்பவர் கலெக்டரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:– காளப்பெருமாள்பட்டியை சேர்ந்த மாரியப்பன் என்பவரிடம் குழந்தைகளின் படிப்பு செலவுக்காக ரூ.35 ஆயிரம் கடன் வாங்கினேன். வாங்கிய கடனுக்கு புரோநோட்டுகளில் கையெழுத்து பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் 10 சதவீதம் வீதம் வட்டி கொடுக்க வேண்டும் என்று தொந்தரவு செய்தார். கடந்த 9 மாதங்களாக மாதந்தோறும் முதல் தேதியில் ரூ.7500 வட்டி கட்டி வந்தோம்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் நாங்கள் வாங்கிய பணத்தை அசலும், வட்டியுமாக சேர்த்து மொத்தமாக செலுத்த வேண்டும் என்று கேட்டு அவதூறாக பேசி மிரட்டினார். அக்கம்–பக்கத்தில் கடன் பெற்று மாரியப்பனின் பணத்தை கொடுத்த நிலையில் புரோநோட்டை கேட்ட போது கூடுதல் வட்டி கேட்டு ரூ.20 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறி புரோநோட்டை தர மறுத்துவிட்டார்.
இந்த விவகாரம் விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்துக்கு சென்ற நிலையிலும் பலன் கிடைக்கவில்லை. மாரியப்பன் அவதூறாக பேசியதுடன் தற்கொலை செய்து கொள்ள வேண்டியது தானே என்று கூறினார். மேலும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டினார். இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.