2 வாலிபர்கள் சாவு: சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
சாத்தூர் அருகேயுள்ள நடுசூரங்குடியை சேர்ந்த வாலிபர்களான ஞானசேகர், திலகராஜ் ஆகியோர் சில தினங்களுக்கு முன்பு ஒரு தோட்டத்தில் இறந்து கிடந்தனர்.
சாத்தூர்,
சாத்தூர் அருகேயுள்ள நடுசூரங்குடியை சேர்ந்த வாலிபர்களான ஞானசேகர், திலகராஜ் ஆகியோர் சில தினங்களுக்கு முன்பு ஒரு தோட்டத்தில் இறந்து கிடந்தனர். சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் போராட்டத்தில் இறங்கியதால் இதுகுறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நடுசூரங்குடிக்கு வந்து இரு வாலிபர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியதோடு தலா ரூ.25 ஆயிரம் வழங்கினார். இதனைதொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், 2 பேர் உயிரிழந்தது குறித்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்வதோடு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும் என்றார். இருவரின் குடும்பத்துக்கும் அரசு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகாரை வைத்து தேர்தலை ரத்துசெய்யக்கூடாது என்றும் பணம் கொடுக்கும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். குமரி மாவட்டத்தை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிப்பதோடு புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தொல்.திருமாவளவன் கூறினார்.