கல்குவாரி லைசென்சை 8 வாரத்தில் புதுப்பித்து தர வேண்டும் அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கல்குவாரி லைசென்சை புதுப்பித்து தர 8 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு அருகே கரைகட்டுவிளையை சேர்ந்த ராஜகுமரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
எனக்கு சொந்தமான பட்டா நிலம் மாங்கோடு கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தில் கருங்கல் மற்றும் ஜல்லிக்கற்கள் எடுப்பதற்கான அனுமதி கேட்டு கலெக்டரிடம் விண்ணப்பித்தேன். கடந்த 2012–ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு குவாரி பணிகளுக்காக கலெக்டர் அனுமதி கொடுத்தார். இதற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் தடையின்மை சான்றும் பெறப்பட்டுள்ளது. முதன்மை தலைமை வன பாதுகாவலரும் தடையின்மை சான்று வழங்கியுள்ளார். மலைப்பகுதி பாதுகாப்பு அதிகாரக்குழுவும் குவாரி நடத்த அனுமதித்துள்ளது. இந்த அனுமதி காலம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது.
இதனால் எனக்கு வழங்கப்பட்ட லைசென்சை மேலும் 5 ஆண்டுகளுக்கு புதுப்பித்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பித்தேன். ஆனால் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் தடையின்மை சான்று உள்ளிட்டவற்றை புதிதாக தரக்கோரி உரிமத்தை புதுப்பிக்க மறுக்கின்றனர். விதிப்படி சுற்றுச்சூழல் ஆணையத்தின் தடையின்மை சான்று ஒரு முறை பெற்றால் போதும். அவ்வப்போது பெற தேவையில்லை. எனவே, கல்குவாரி லைசென்சை புதுப்பித்து தர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் வள்ளிநாயகம், ஞானகுருநாதன் ஆகியோர் ஆஜரானார்கள்.
முடிவில், “விதிகளின்படி மனுதாரர் தரப்பு வாதம் ஏற்புடையதாகவே உள்ளது. புதிதாக சான்றுகள் பெற வேண்டும் என்பதில் எந்த முகாந்திரமும் இல்லையென்று தெரிகிறது. எனவே, லைசென்சை புதுப்பிக்க வேண்டுமென்று மனுதாரர் தாக்கல் செய்த மனுவை அவர் ஏற்கனவே தாக்கல் செய்த சான்றுகளின் அடிப்படையில் பரிசீலித்து 8 வாரத்திற்குள் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.