போலீஸ் போல் நடித்து ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேர் சிறையில் அடைப்பு


போலீஸ் போல் நடித்து ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 20 Dec 2017 3:15 AM IST (Updated: 20 Dec 2017 1:58 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் போல் நடத்து ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விக்கிரவாண்டி,

விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே சில நாட்களுக்கு முன்பு போலீஸ் அதிகாரிகள் போன்று வேடமணிந்து,காரை சோதனை செய்வது போல் நடித்து, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே தொண்டி பகுதியை சேர்ந்த சின்னதுரை என்பவரிடம் ரூ.30 லட்சத்தை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய தனிப்படை போலீசாருக்கு, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வால்பாறை பகுதியில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று, ஒரு தங்கும் விடுதியில் பதுங்கி இருந்த ஈரோடு சென்னிமலையை சேர்ந்த சண்முகம் (வயது 42), ஸ்ரீவைகுண்டம் பேச்சிமுத்து (30), நெல்லை தேவதாஸ் (40), ஸ்ரீவில்லிப்புத்தூர் முருகன் (32), கோவை செந்தில்குமார் (34), தூத்துக்குடி நடராஜன் (23) ஆகியோரையும், இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக வால்பாறை முருகாளி எஸ்டேட் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (46), கலியாணபந்தல் எஸ்டேட்டை சேர்ந்த இளங்கோவன் (36) ஆகியோர் என்று மொத்தம் 8 பேரை போலீசார் கைது செய்து, விக்கிரவாண்டிக்கு கொண்டு வந்தனர்.

இவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மற்றும் போலீஸ் வேடமணிந்து வந்த சுரேஷ்குமார் என்பவரிடமிருந்த சீரூடை, இரண்டு கைவிலங்கு, லத்தி மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 8 பேரையும் போலீசார் விழுப்புரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 2–ல் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இது குறித்து மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் கூறுகையில், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளிகளான 2 பேரை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகிறோம். கைதான இவர்கள் இவர்கள் மீது உள்ள பழைய வழக்குகள் குறித்தும் விசாரணை செய்யபட்டு வருகிறது. விரைந்து செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்த தனிப்படையினரை பாராட்டுவதாக அவர் தெரிவித்தார்.


Next Story