தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள மலேசிய மணலை வேறு இடத்துக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்த மணலை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வெளியில் கொண்டு வந்து வினியோகம் செய்ய அனுமதி வழங்க உத்தரவிடுமாறு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
மதுரை,
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்த மணலை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வெளியில் கொண்டு வந்து வினியோகம் செய்ய அனுமதி வழங்க உத்தரவிடுமாறு ராமையா எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தனி நீதிபதி, தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்தில் மூட வேண்டும் என்று கடந்த மாதம் 29–ந்தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த மேல்முறையீட்டு வழக்கில் ராமையா எண்டர்பிரைசஸ் தரப்பில் துணை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை வைப்பதற்கு கட்டணமாக தூத்துக்குடி துறைமுகம் தரப்பில் தினந்தோறும் ரூ.6 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுவரை 1 கோடியே 71 லட்ச ரூபாயை செலுத்த வேண்டும் என்று துறைமுகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதிக கட்டணம் என்பதால் மலேசிய மணலை தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக கழகத்திற்கு சொந்தமான கட்டணம் குறைவாக உள்ள வேறு இடத்துக்கு மாற்ற அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த துணை மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தூத்துக்குடி கலெக்டர் தரப்பில், மணலை வேறு பகுதிக்கு மாற்ற கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் துணை மனு மீது எத்தகைய உத்தரவையும் பிறப்பிக்க இயலாது என்றனர்.இதையடுத்து துணை மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த மனுவை ள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.