ஆதர்ஷ் ஊழல் வழக்கு அசோக் சவான் மீது விசாரணை; கவர்னரின் ஒப்புதல் தள்ளுபடி மும்பை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


ஆதர்ஷ் ஊழல் வழக்கு அசோக் சவான் மீது விசாரணை; கவர்னரின் ஒப்புதல் தள்ளுபடி மும்பை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 22 Dec 2017 10:30 PM GMT (Updated: 22 Dec 2017 9:19 PM GMT)

ஆதர்ஷ் ஊழல் வழக்கில் முன்னாள் முதல்–மந்திரி அசோக் சவான் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த கவர்னர் அளித்த ஒப்புதலை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மும்பை,

ஆதர்ஷ் ஊழல் வழக்கில் முன்னாள் முதல்–மந்திரி அசோக் சவான் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த கவர்னர் அளித்த ஒப்புதலை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.

ஆதர்ஷ் ஊழல்

கார்கில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்காக தென் மும்பை கொலபா பகுதியில், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், 31 மாடிகளை கொண்ட வானுயர குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டது. ஆதர்ஷ் வீட்டுவசதி சங்கம் சார்பில் கட்டப்பட்ட இந்த குடியிருப்பில், அனுமதிக்கப்பட்ட உயரத்தை காட்டிலும் கூடுதலாக கட்டிடங்கள் கட்டியதாகவும், இதில் முறைகேடு அரங்கேறியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், ராணுவத்தினருக்காக கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பில், 40 சதவீத வீடுகள் ராணுவம் அல்லாதோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், குறிப்பாக அப்போதைய முதல்–மந்திரி அசோக் சவான் உள்பட அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளின் நெருங்கிய உறவினர்களுக்கு விதிமுறைகளை மீறி வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. நாடு முழுவதும் எதிரொலித்த இந்த ஆதர்ஷ் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அசோக் சவான் முதல்–மந்திரி பதவியை இழந்தார்.

கவர்னர் அனுமதி மறுப்பு

இதைத்தொடர்ந்து, ஆதர்ஷ் ஊழல் புகார் தொடர்பாக அசோக் சவான் உள்பட 14 பேர் மீது கடந்த 2013–ம் ஆண்டில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. ஊழல் அரங்கேறியதாக கூறப்படும் தருணத்தில், அசோக் சவான் அரசு பதவி வகித்ததால், அவர் மீது விசாரணை நடத்த அனுமதிக்குமாறு அப்போதைய கவர்னர் கே.சங்கரநாராயணிடம் சி.பி.ஐ. ஒப்புதல் கோரியது. இதனை பரிசீலித்த அவர், அசோக் சவான் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்.

இதையடுத்து, மராட்டியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாரதீய ஜனதா– சிவசேனா கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தது. இந்த நிலையில், ஆதர்ஷ் ஊழல் வழக்கை கையில் எடுத்த சி.பி.ஐ., அசோக் சவான் மீது விசாரணை நடத்த ஒப்புதல் அளிக்குமாறு கவர்னர் வித்யாசாகர் ராவிடம் அனுமதி கோரியது. இதனை பரிசீலித்த கவர்னர், ஆதர்ஷ் ஊழல் புகாரில் முன்னாள் முதல்–மந்திரி அசோக் சவான் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்தார்.

இதனால், அரசியல் அரங்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டது.

அசோக் சவான் மனு

இதைத்தொடர்ந்து, கவர்னரின் ஒப்புதலை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் சவான் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘‘கவர்னரின் உத்தரவு அரசியல் உள்நோக்கம் கொண்டது. தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது’’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘‘அரசியல் சூழல் காரணமாக அசோக் சவான் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார்’’ என்று அவர் தரப்பு வக்கீல் வாதிட்டார்.

இதனை மறுத்த சி.பி.ஐ. தரப்பு வக்கீல், அரசு நியமித்த நீதிக்குழு அதன் ஆய்வு அறிக்கையில், ஆதர்ஷ் ஊழல் வழக்கில் அசோக் சவானுக்கு எதிராக புதிய ஆதாரங்களை கண்டறிந்து இருப்பதை சுட்டிக்காட்டினார். மேலும், ஏற்கனவே ஆதர்ஷ் ஊழல் வழக்கில் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து தன்னுடைய பெயரை நீக்க கோரி அசோக் சவான் தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.

கவர்னர் உத்தரவு தள்ளுபடி

இந்த வழக்கின் இறுதிகட்ட வாதம் நிறைவடைந்ததை தொடர்ந்து, நீதிபதிகள் ரஞ்சித் மோரே மற்றும் சாதனா ஜாதவ் ஆகியோர் நேற்று தீர்ப்பு அளித்தனர். அதன்படி, அசோக் சவான் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பு விவரம் வருமாறு:–

இந்த வழக்கில், முன்னாள் கவர்னரின் முடிவை மறுஆய்வு அல்லது மறுபரிசீலனை செய்ய கவர்னருக்கு (வித்யாசாகர் ராவ்) அதிகாரம் இருக்கிறது. இருப்பினும், புதிய ஆதாரங்களை தாக்கல் செய்வதில் சி.பி.ஐ. தோல்வி அடைந்துவிட்டது.

மேலும், நீதிக்குழு ஆய்வு அறிக்கையும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவும் நம்பத்தகுந்த ஆதாரமாக கருத்தில் கொள்ளும் தன்மையில் இல்லை. புதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாததால், கவர்னர் ஒப்புதல் அளிக்க முடியாது.

ஆகையால், மனுதாரர் மீது விசாரணை நடத்த கவர்னர் பிறப்பித்த உத்தரவு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.


Next Story