தம்பதி கொலை வழக்கில் திடீர் திருப்பம்: சொத்துக்காக மகனே வேலையாட்களை ஏவி கொலை செய்தது அம்பலம்


தம்பதி கொலை வழக்கில் திடீர் திருப்பம்: சொத்துக்காக மகனே வேலையாட்களை ஏவி கொலை செய்தது அம்பலம்
x
தினத்தந்தி 6 Jan 2018 3:45 AM IST (Updated: 6 Jan 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே தம்பதி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக சொத்துக்காக மகனே வேலையாட்களை ஏவி கொலை செய்தது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

காங்கேயம்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வீரணம்பாளையம் ஊராட்சி சூலக்கல்புதூர் நீலக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 60), விவசாயி. இவருடைய மனைவி கண்ணம்மாள்(55). இவர்களின் மகள் ஜோதிலட்சுமி(33), மகன் பெரியசாமி(31). இவர்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இதில் பெரியசாமி காங்கேயம் நகரில் திருப்பூர் ரோட்டில் உள்ள அன்னை சத்யாநகரில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்துக்கொண்டு விவசாயம் செய்து வருகிறார். ஜோதிலட்சுமி தனது கணவருடன் காங்கேயத்தில் வசித்து வருகிறார். இதனால் பழனிசாமி–கண்ணம்மாள் தம்பதி மட்டும் சூலக்கல்புதூரில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 3–ந்தேதி இரவு பழனிசாமியையும், கண்ணம்மாளையும் மர்ம ஆசாமிகள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் கண்ணம்மாளின் கழுத்தில் இருந்த 8 பவுன் சங்கிலியை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். நேற்று முன்தினம் காலை இவருடைய வீட்டுக்கு பால் கொண்டு சென்ற பக்கத்து தோட்டத்துக்காரர், பழனிசாமியும், அவருடைய மனைவியும் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து காங்கேயம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது தம்பதியை கொலை செய்தவர்கள் பற்றிய துப்பு எதுவும் கிடைக்கவில்லை. இதுகுறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவந்தனர்.

விசாரணையில் தம்பதி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக பெற்ற மகனே வேலையாட்களை ஏவி பெற்றோரை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக கொலையான தம்பதியின் மகன் பெரியசாமி மற்றும் அவருடைய தோட்டத்தில் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்த நாகராஜ்(43), பழனிசாமியின் தோட்டத்தில் வேலை செய்து வந்த ஈரோடு மாவட்டம் சிவகிரி கந்தசாமிபாளையத்தை சேர்ந்த யுவராஜ் (29) ஆகியோர் காங்கேயம் கிராம நிர்வாக அதிகாரி பார்த்திபன் முன்னிலையில் நேற்று அதிகாலை சரணடைந்தனர்.

இதைத்தொடர்ந்து பெரியசாமி, நாகராஜ், யுவராஜ் ஆகிய 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது பெரியசாமி போலீசாரிடம் கூறியதாவது:–

எனது தந்தை பழனிசாமி, என்னை சிறுவயது முதலே சரியாக கவனிக்காமல் புறக்கணித்து வந்தார். மேலும் எனது அக்கா ஜோதிலட்சுமிக்கு பண உதவிகளையும், பொருளுதவிகளையும் செய்து வந்தார். மேலும் எனக்கு திருமணமான சில மாதங்களிலேயே தனிக்குடித்தனம் செல்லுமாறு அனுப்பிவிட்டார். எனக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமல் என்னை புறக்கணித்து வந்தார். மேலும் அவருடைய தோட்டத்தில் வேலைசெய்யும் வேலையாட்களையும் அவர், தேவையில்லாமல் அடித்து உதைப்பார்.

இந்தநிலையில் காங்கேயத்தில் உள்ள 60 சென்ட் நிலத்தை எனது அக்காவிற்கு கொடுத்துள்ளார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனது தந்தையை கொலை செய்துவிட்டால் சொத்துகள் தானாக எனக்கு வந்துவிடும் என்று நினைத்தேன். கடந்த வாரம் அவினாசிபாளையம் பகுதியில் தம்பதி கொலை செய்யப்பட்டது நினைவுக்கு வந்தது.

இதுபற்றி என் தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்யும் நாகராஜிடம் கூறி எனது தந்தையை கொலை செய்ய திட்டம் தீட்டினேன். இதற்கு எனது தந்தையின் தோட்டத்தில் வேலை பார்த்து வந்த யுவராஜை துணைக்கு அழைத்துக்கொண்டேன். அவரும் எனது தந்தையிடம் அடிக்கடி அடி–உதை வாங்கியதால் இந்த திட்டத்துக்கு ஒத்துக்கொண்டார்.

எனது தந்தையை கொலை செய்ய, நாகராஜிக்கு ரூ.2 லட்சமும், யுவராஜிக்கு ரூ.1 லட்சமும் தருவதாக கூறி இருவரையும் சம்மதிக்க வைத்தேன். மேலும் கொலையை திசை திருப்ப, நகை–பணத்தையும் கொள்ளையடித்து செல்லும்படி திட்டம் போட்டுக்கொடுத்தேன். மேலும் எனது தந்தையை கொலை செய்துவிட்டு அவருடைய செல்போனில் இருந்தே எனக்கு போன் செய்யும்படி கூறினேன். பின்னர் நான் திட்டமிட்டபடி கடந்த 1–ந் தேதி மாலை அணிந்து முருகன் கோவிலுக்கு நண்பர்களுடன் சென்றுவிட்டேன்.

இவ்வாறு பெரியசாமி கூறியுள்ளார்.

இவர்கள் போட்ட திட்டத்தின் படி, கடந்த 3–ந் தேதி இரவு 9 மணி அளவில் நாகராஜ் அரிவாளுடன் மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார். பின்னர், பழனிசாமியின் தோட்டத்தில் தங்கி இருந்த யுவராஜை அழைத்துக்கொண்டு பழனிசாமியிடம் சென்றுள்ளார். அப்போது, வீட்டின் வாசலில் அமர்ந்து இருந்த பழனிசாமி, யுவராஜை மதுவாங்கி வரும்படி கூறியுள்ளார். பின்னர், அவர் வாங்கி கொடுத்த மதுவை குடித்துள்ளார். அப்போது, பெரியசாமி தனது தந்தையின் செல்போனுக்கு இருமுறை போன் செய்துள்ளார். ஆனால், இருமுறையும் பழனிசாமியே போனை எடுத்துள்ளார்.

சிறிது நேரத்தில் கட்டிலில் இருந்து எழுந்த பழனிசாமியை, தான் வைத்து இருந்த அரிவாளால் நாகராஜ் வெட்டியுள்ளார். இதில் தடுமாறி கீழே விழுந்த அவரை யுவராஜ் பிடித்துக்கொள்ள நாகராஜ் மீண்டும் கழுத்தின் மறுபக்கம் வெட்டியுள்ளார். இதில் சரிந்து விழுந்த பழனிசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அப்போது, தனது கணவரின் சத்தம் கேட்டு ஓடிவந்த கண்ணம்மாள், இருவரையும் அடையாளம் கண்டு கொண்டதால், அவரையும் அவர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் அவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பின்னர் கண்ணம்மாள் அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டனர். பின்னர் வீட்டுக்குள் சென்ற அவர்கள், அங்கிருந்து ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். போலீசார் தங்களை தேடுவதை அறிந்த பெரியசாமியும், 2 வேலையாட்களும் நேற்று கிராம நிர்வாக அதிகாரியிடம் சரணடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து பெரியசாமி, நாகராஜ், யுவராஜ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள், மோட்டார்சைக்கிள் போன்றவற்றையும் போலீசார் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.


Next Story