துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.85½ லட்சம் தங்கம் பறிமுதல் பெண்கள் உள்பட 5 பேர் கைது


துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.85½ லட்சம் தங்கம் பறிமுதல் பெண்கள் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 12 Jan 2018 4:00 AM IST (Updated: 12 Jan 2018 3:23 AM IST)
t-max-icont-min-icon

மும்பை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.85½ லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சம்பவத்தன்று இரவு துபாயில் இருந்து வந்த விமானம் ஒன்று தரைஇறங்கியது. இந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளில் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின் போது, முகேஷ்குமார் என்ற பயணி உள்பட 4 பயணிகளின் உடைமைகளில் தங்கக்கட்டிகள் மற்றும் நகைகள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் 3 கிலோ 100 கிராம் எடை கொண்டதாக இருந்தன. அவற்றின் மதிப்பு 85 லட்சத்து 50 ஆயிரம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரும் சகார் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். கைதானவர்களில் 2 பேர் பெண்கள் ஆவர். போலீசார் அவர்களை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், துபாயில் இருந்து வந்திறங்கிய மற்றொரு விமானத்தில் வந்த அப்பாஸ் மாவல் என்ற பயணி ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் வைத்திருந்தார். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து அவர் கொண்டு வந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த தங்கக்கட்டிகள் சுங்கவரி ரசீது இல்லாததால் அவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story