கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த ஆசிரியர் கல்லால் தாக்கி கொலை காதலனுடன் மனைவி கைது


கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த ஆசிரியர் கல்லால் தாக்கி கொலை காதலனுடன் மனைவி கைது
x
தினத்தந்தி 18 Feb 2018 4:30 AM IST (Updated: 18 Feb 2018 2:09 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த ஆசிரியர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காதலனுடன் மனைவி கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருகே உள்ள மருத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 34), அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் திருவண்ணாமலை தேவனாம்பட்டு பகுதியை சேர்ந்த தீபா (25) என்பவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

சுரேஷ் குடும்பத்துடன் தேவனாம்பட்டு பகுதியிலேயே தங்கி பணிக்கு சென்று வந்தார். தீபா தேவனாம்பட்டு பகுதியில் உள்ள ஒரு கணினி மையத்தில் வேலை பார்த்து வருகிறார். அப்போது தேவனாம்பட்டு அருகே உள்ள மேப்பத்துறையை சேர்ந்த தொழிலாளி பிரபு (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

பின்னர் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றி சுரேசுக்கு தெரியவந்தது. இருப்பினும் கள்ளக்காதலனுடன் தீபா தொடர்ந்து நெருங்கி பழகி வந்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த தீபாவும், பிரபும் சேர்ந்து சுரேஷ்சை கொலை செய்ய திட்டம் தீட்டினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சுரேசுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மாலையில் கணவன் - மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் வீடு திரும்பினர். இரவு 9 மணி அளவில் திருவண்ணாமலை அருகே உள்ள ஊசாம்பாடி பொன்னி நகர் பகுதியில் உள்ள காலிமனை அருகில் மோட்டார் சைக்கிளில் வந்தபோது, சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தீபா கூறியுள்ளார். இதனையடுத்து சுரேஷ் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

பின்னர் தீபா தனியாக சென்றார். அப்போது அங்கு மறைந்து இருந்த தீபாவின் கள்ளக்காதலன் பிரபு திடீரென பாறாங்கல்லை தூக்கி சுரேஷின் தலையில் போட்டார். இதில் நிலை குலைந்து அவர் கீழே விழுந்தார். தொடர்ந்து பிரபு கல்லால் சுரேஷ்சை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதையடுத்து தீபா, பிரபுவை அங்கிருந்து தப்பிக்க வைத்தார்.

அதைத் தொடர்ந்து தீபா, தனது உறவினர்களுக்கு போன் செய்து சுரேஷ்சை மர்ம நபர்கள் தாக்கியதில் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார் என்று கூறினார். பின்னர் சிறிது நேரத்தில் சுரேஷ் பரிதாபமாக அங்கேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது தீபா மீது சந்தேகம் அடைந்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து சுரேஷ்சை, தீபா கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீபாவையும், கள்ளக்காதலன் பிரபுவையும் கைது செய்தனர்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story