ரூ.8 லட்சத்தை அபேஸ் செய்த கட்டுமான ஒப்பந்ததாரர் கைது


ரூ.8 லட்சத்தை அபேஸ் செய்த கட்டுமான ஒப்பந்ததாரர் கைது
x
தினத்தந்தி 23 Feb 2018 3:45 AM IST (Updated: 23 Feb 2018 3:45 AM IST)
t-max-icont-min-icon

வங்கியில் இருந்து எடுத்த ரூ.8 லட்சத்தை அபேஸ் செய்த கட்டுமான ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார்.

தானே,

வங்கியில் இருந்து எடுத்த ரூ.8 லட்சத்தை அபேஸ் செய்த கட்டிட ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் பணம் கொள்ளை போனதாக நாடகமாடியது அம்பலமானது.

தானேயை சேர்ந்தவர் முகமது ஜட்சேட். இவர் கட்டுமான ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். கடந்த 17–ந் தேதி இவர் தொழிலாளிகளுக்கு ஊதியம் வழங்குவதற்காக கட்டுமான அதிபரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.8 லட்சத்தை எடுத்தார்.

பின்னர் தான் வந்து கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மஆசாமிகள் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிஓடிவிட்டதாக காப்பூர்பாவடி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டனர்.

ஆனால் அன்றைய தினத்தில் அந்த பகுதியில் அப்படி ஒரு சம்பவம் நடந்த காட்சி எதுவும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் முகமது ஜட்சேட்டிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, அவர் ரூ.8 லட்சத்தையும் அபேஸ் செய்துவிட்டு, மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டதாக நாடகமாடியது அம்பலம் ஆனது.

இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


Next Story