பள்ளிக்கூட மாணவன் அடித்து கொலை பலத்த காயத்துடன் தாய், சகோதரி ஆஸ்பத்திரியில் அனுமதி
பள்ளிக்கூட மாணவனை அடித்துக் கொலை செய்யப்பட்டான். தாய், சகோதரி பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
திருக்கோவிலூர்,
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மனைவி ஆராயி(வயது 45). இவர்களுக்கு பாண்டியன் (25), சரத்குமார் (22), விஜயகுமார் (19), சமயன்(8) ஆகிய 4 மகன்களும், அஞ்சலாட்சி (17), தனம் (15) ஆகிய இரு மகள்களும் உள்ளனர். ஏழுமலை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பாண்டியன், சரத்குமார், விஜயகுமார் ஆகிய 3 பேரும் பெங்களூருவில் தங்கி, கூலி வேலை பார்த்து வருகிறார்கள்.
அஞ்சலாட்சி திருப்பூரில் தங்கி, அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். ஆராயி தனது இளைய மகள் தனம், மகன் சமயன் ஆகியோருடன் வெள்ளம்புத்தூரில் தங்கி உள்ளார். தனம் தேவனூரில் உள்ள அரசு பள்ளியில் 8–ம் வகுப்பும், சமயன் அதேஊரில் உள்ள தொடக்கப்பள்ளியில் 4–ம் வகுப்பும் படித்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு ஆராயி வழக்கம்போல் வீட்டில் இருந்த தனது 2 குழந்தைகளுடன் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் ஆராயி வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து பார்த்தனர்.
அப்போது சமயன் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தான். ஆராயி, தனம் ஆகிய 2 பேரும் ரத்த காயங்களுடன் மயங்கியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்
தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சுயநினைவு இன்றி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய ஆராயி, தனம் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதற்கிடையே பிணமாக கிடந்த சமயன் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய், மகன், மகள் ஆகிய 3 பேரையும் மர்மநபர்கள் ஆயுதங்களால் சரமாரியாக அடித்துள்ளனர். அவர்கள் 3 பேரும் மயங்கியதும், அவர்கள் உயிரிழந்து விட்டார்கள் என நினைத்து அந்த மர்மநபர்கள் ஓடி உள்ளார்கள். இந்த கொடூர தாக்குதலில் சமயன் உயிரிழந்துள்ளான். தாய், மகள் இருவரும் சுய நினைவு இன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் கண் விழித்து நடந்த சம்பவம் பற்றி கூறினால் தான் மாணவர் கொலைக்கான விவரம் தெரியவரும். எனினும் நாங்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்