கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு


கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 24 Feb 2018 10:15 PM GMT (Updated: 24 Feb 2018 6:03 PM GMT)

களியக்காவிளை அருகே கோவிலில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

களியக்காவிளை,

களியக்காவிளை அருகே முளவரக்கோணம் பகுதியில் தர்ம சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் தர்ம சாஸ்தா, முருகன், கணபதி, துர்கா ஆகிய 4 சன்னதிகள் உள்ளன. இந்த சன்னதிகளின் வெளிப்பகுதியில் உண்டியல்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின்பு பூசாரி வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு சென்றார்.

நேற்று காலையில் பூசாரி கோவிலை திறக்க சென்ற போது, கோவில் வளாகத்தில் இருந்த உண்டியல்கள் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவற்றில் இருந்த காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது. நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவில் வளாகத்துக்குள் புகுந்து, உண்டியல்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

போலீஸ் விசாரணை

இது குறித்து களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, உடைக்கப்பட்ட உண்டியல்களில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story