மனைவிக்கு பயந்து ஜெயிலுக்கு போகும் கணவர்


மனைவிக்கு பயந்து ஜெயிலுக்கு போகும் கணவர்
x
தினத்தந்தி 4 March 2018 1:30 PM IST (Updated: 4 March 2018 12:27 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவின் கன்சாஸ் பகுதியை சேர்ந்த லாரன்ஸ் ஜானின் கதை வித்தியாசமானது.

71 வயதாகும் லாரன்ஸ் ஜான் மனைவியிடம் திட்டுவாங்குவதை விட, சிறை தண்டனையே மேலானது என்று எண்ணி அடிக்கடி சிறைவாசம் அனுபவித்து வருகிறார். வங்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு 6 மாத சிறை தண்டனை அனுபவித்தவர், சமீபத்தில் தான் விடுதலையானார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே மற்றொரு வழக்கில் தன்னை கைது செய்யக்கோரி கன்சாஸ் காவல் நிலையத்தில் சரணடைந்துவிட்டார். அதனால் லாரன்ஸின் வழக்கை, எப்படி கையாள்வது என்று தெரியாமல் கன்சாஸ் போலீசார் புலம்பித் தவிக்கிறார்கள்.

போலீஸ் அதிகாரி கூறுகையில் ‘‘லாரன்ஸ் நல்ல மனிதர். குற்றங்களுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. மனைவியிடம் சண்டையிடுவதை தவிர்க்கவும், பழி பேச்சுகளை தவிர்க்கவுமே சிறைத்தண்டனைக்கு உள்ளாகிறார். எப்படி என்கிறீர்களா..?, கடந்த வருடம் மனைவியுடன் நடந்த வாக்குவாதத்தில் மன விரக்திக்குள்ளான லாரன்ஸ், அருகில் இருந்த வங்கிக்குள் நுழைந்து பணத்தை கேட்டு மிரட்டியிருக்கிறார். வங்கி ஊழியர்களும் லாரன்ஸ் கேட்ட பணத்தை ஒப்படைக்க, உடனே அவர் பணத்தோடு வங்கியிலேயே அமைதியாக அமர்ந்துவிட்டார். உடனே வங்கி ஊழியர்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்க, நாங்கள் சென்று லாரன்ஸை அழைத்து வந்தோம்.

அந்த சம்பவத்தில் அவர் யாரையும் துன் புறுத்தவில்லை. தகாத வார்த்தைகளை கூட பயன்படுத்தவில்லை. எதற்காக இப்படி செய் கிறீர்கள்? என்று கேட்டால், ‘மனைவியிடம் திட்டு வாங்கிக்கொண்டு வீட்டில் இருப்பதை விட, சிறையில் இருந்துவிடலாம் என்று தோன்றியது. அதனால் தான் இப்படி நடந்து கொண்டேன். எனக்கு கருணை காட்டிவிடாதீர்கள். ஜெயிலில் அடைத்து விடுங்கள்’ என்று மன்றாடினார். அதனால் தான் அவருக்கு 6 மாத கால சிறைத் தண்டனை கிடைத்தது. சமீபத்தில் தான் விடுதலையானார். ஆனால் அதற்குள் மீண்டும் போலீஸ் நிலையத்தை தேடி வந்துவிட்டார். இவரை எப்படி சமரசப்படுத்துவது என்று தெரியவில்லை’’ என்கிறார்.

போலீசார் இவரையும், இவரது மனைவியையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி ‘கவுன்சலிங்’ கொடுத்து வருகிறார்கள்.

Next Story