மகனை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது


மகனை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது
x
தினத்தந்தி 14 March 2018 3:30 AM IST (Updated: 14 March 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

மகனை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஐகோர்ட்டு உறுதி செய்தது.

மதுரை,

நெல்லை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் தங்கவேல். மது போதைக்கு அடிமையான இவர், தினமும் மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், அடித்து துன்புறுத்தி வந்தார். இதனை அவர்களது மூத்த மகன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தங்கவேல் 18.9.2010 அன்று வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த தனது மகனை மண்வெட்டியால் அடித்து கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

மகனுக்காக தன் உயிரை நீத்த இந்திய திருநாட்டில், பாதுகாத்து வளர்க்க வேண்டிய மகனையே மனுதாரர் கொலை செய்திருக்கிறார். தாயாருக்கு அளித்த தொல்லையை தட்டிக்கேட்ட மகன் கொல்லப்பட்டு உள்ளார். இது அரிதிலும் அரிதான வழக்கு. இதற்காக மனுதாரருக்கு கூடுதல் தண்டனை வழங்க வேண்டும். ஆனால் தற்போது தண்டனை குறித்து முடிவெடுக்க முடியாது. கீழ்கோர்ட்டு மனுதாரருக்கு வழங்கிய தண்டனை உறுதிப்படுத்தப்படுகிறது.

தனது கணவனால் மகனை இழந்த தாய்க்கு இழப்பீடு வழங்கப்பட வில்லை. மனுதாரரின் மனைவி தன்னுடைய 2 மைனர் மகள்களையும் வளர்த்து ஆளாக்க வேண்டியுள்ளது. எனவே அவருக்கு நெல்லை மாவட்ட இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு 3 லட்சம் ரூபாய்க்கு குறையாமல் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரரின் 2 குழந்தைகளின் கல்விக்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் மாதந்தோறும் ரூ.2 ஆயிரத்தை அவர்கள் மேஜர் ஆகும் வரை வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Next Story