ரெயிலில் நகை, பணம் திருட்டு பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.1½ லட்சம் இழப்பீடு


ரெயிலில் நகை, பணம் திருட்டு பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.1½ லட்சம் இழப்பீடு
x
தினத்தந்தி 21 March 2018 4:49 AM IST (Updated: 21 March 2018 4:49 AM IST)
t-max-icont-min-icon

ரெயிலில் நகை, பணம் திருட்டுபோன சம்பவத்தில் பாதிக்கப் பட்ட பயணிக்கு ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என கொங்கன் ரெயில்வேக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

தானே மாவட்டம் உல்லாஸ்நகரை சேர்ந்தவர் வினோத் நாயக். இவர் கடந்த 2015-ம் ஆண்டு மே 14-ந்தேதி கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து மும்பை குர்லா டெர்மினஸ் வரும் ரெயிலில் மனைவி மற்றும் குழந்தையுடன் பயணம் செய்து கொண் டிருந்தார். அன்று நள்ளிரவு 12.10 மணியளவில் கொங்கன் ரெயில்வே வழித்தடத்தில் கோலாட்-மான்காவ் ரெயில் நிலையங்களுக்கு இடையே யாரோ ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தினர்.

அந்த நேரத்தில் மர்மஆசாமிகள் வினோத் நாயக் வைத்திருந்த தங்கநகை, செல்போன், பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டு சென்றுவிட்டனர். அதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் என கூறப்படுகிறது.

இந்த திருட்டு நடந்தபோது, அந்த ரெயிலில் பாதுகாப்பு பணியில் போலீசாரோ அல்லது டிக்கெட் பரிசோதகர்களோ இல்லை. உல்லாஸ்நகர் திரும்பிய அவர், ரெயிலில் தனது பொருட்கள் திருட்டு போனதற்கு ரெயில்வே தான் காரணம் என கூறி, இதற்கு இழப்பீடாக ரூ.2 லட்சத்து 90 ஆயிரம், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.5 லட்சம், வழக்கு செலவுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க கொங்கன் ரெயில்வேக்கு உத்தரவிட வேண்டும் என தானே நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, பயணிகளின் உரிய ரசீது பெற்ற உடைமைகளுக்கு மட்டுமே ரெயில்வே பொறுப்பாக முடியும். இந்த வழக்கில் பயணி பறிகொடுத்த பொருட்கள் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது.

எனவே இந்த திருட்டுக்கு ரெயில்வே பொறுப்பாகாது என கொங்கன் ரெயில்வே சார்பில் வாதிடப்பட்டது. மேலும் ஒவ்வொரு ரெயில் பெட்டியிலும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசை பாதுகாப்பு பணியில் நிறுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதை ஏற்க மறுத்து, ரெயிலில் பயணம் செய்யும் ஒவ்வொரு பயணிக்கும், அவர்களது உடைமைகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது ரெயில்வேயின் கடமை என கூறிய நுகர்வோர் கோர்ட்டு, பாதிக்கப்பட்ட பயணி வினோத் நாயக்கிற்கு திருட்டுப்போன பொருட் களுக்காக ரூ.1 லட்சமும், அதனால் அவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூ.50 ஆயிரமும், வழக்கு செலவுக்கு ரூ.15 ஆயிரமும் என சேர்த்து ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்தை 45 நாட்களில் வழங்க வேண்டும் என கொங்கன் ரெயில்வேக்கு உத்தரவிட்டது. 

Next Story