ரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில் போலீஸ் ஏட்டுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை


ரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில் போலீஸ் ஏட்டுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 22 March 2018 3:45 AM IST (Updated: 22 March 2018 2:34 AM IST)
t-max-icont-min-icon

ரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில் போலீஸ் ஏட்டுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் வடக்குமாதவி ரோடு, மேட்டுத்தெருவை சேர்ந்த செல்லமுத்து மகன் ஜட்ஜ் (வயது 30). இவரது மனைவி ரேகா (26). கணவன்-மனைவி இருவரும் பி.பார்ம் படித்து முடித்துள்ளனர். ரேகா பெரம்பலூர் தனியார் மருந்தியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் ஜட்ஜ் தனது மனைவி ரேகாவுடன் வெளிநாடு சென்று பணிபுரிய திட்டமிட்டுள்ளார். இதில் தனக்கு ஏற்கனவே பாஸ்போர்ட் விண்ணப்பித்து பெற்று விட்ட நிலையில் தனது மனைவி ரேகாவுக்கு பாஸ்போர்ட் வழங்கும்படி திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் கடந்த 2010-ல் விண்ணப்பித்திருந்தார். இதற்கான போலீஸ் விசாரணைக்கான கடிதம் பெரம்பலூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்தது.

போலீஸ் ஏட்டு கைது

பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணிபுரிந்து வந்த ஆறுமுகம் (40) அந்த கடிதத்தை எடுத்து கொண்டு ஜட்ஜின் வீட்டுக்கு விசாரணைக்கு சென்றுள்ளார். அங்கிருந்த ஜட்ஜிடம், ஆறுமுகம் பாஸ்போர்ட் பெறுவதற்கான விசாரணைக்காக வந்துள்ளதாக கூறி ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். இல்லாவிட்டால் பாஸ்போர்ட் தாமதமாகத்தான் கிடைக்கும் என கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜட்ஜ் இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

புகாரின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.500-ஐ ஜட்ஜிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து ஆறுமுகத்திடம் கொடுக்க கூறினர். இதையடுத்து அவர் பணத்தை எடுத்து கொண்டு பெரம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்த ஏட்டு ஆறுமுகம் இங்கு பணத்தை தரவேண்டாம் காந்தி சிலை அருகே உள்ள பிள்ளையார் கோவில் பகுதிக்கு வாருங்கள் என்று கூறினார். இதையடுத்து அங்கு ரூ.500-ஐ ஜட்ஜ், ஆறுமுகத்திடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆறுமுகத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

3 ஆண்டு சிறை தண்டனை

இதுகுறித்த வழக்கு விசாரணை பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி சஞ்சீவி பாஸ்கர், லஞ்சம் வாங்கிய ஆறுமுகத்திற்கு 3 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார். 

Next Story