பட்டப்பகலில் துணிகரம்: பூட்டிய வீட்டில் 17 பவுன் நகைகள், பணம் கொள்ளை


பட்டப்பகலில் துணிகரம்: பூட்டிய வீட்டில் 17 பவுன் நகைகள், பணம் கொள்ளை
x
தினத்தந்தி 22 March 2018 11:00 PM GMT (Updated: 22 March 2018 5:27 PM GMT)

ஆரல்வாய்மொழி அருகே பூட்டிய வீட்டில் கதவை திறந்து 17 பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே தாழக்குடி, கனகமூலம் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (வயது 55), தொழிலாளி. இவர் உவரியில் ஒரு கடையில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (49). இவர் ஆரல்வாய்மொழியில் ஒரு செங்கல்சூளையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு தங்க கிருஷ்ணன் என்ற மகனும், லிங்க பூபதி என்ற மகளும் உள்ளனர். மகன் தங்க கிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வருகிறார். மகள் லிங்க பூபதி திருமணமாகி சீதப்பாலில் கணவர் வீட்டில் தங்கியுள்ளார். லிங்க பூபதிக்கு சொந்தமான 17 பவுன் நகையை பாதுகாப்பு கருதி தனது தாய் வீட்டில் வைத்திருந்தார்.

நேற்று முன்தினம் அதிகாலையில் ராஜேஸ்வரி செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று விட்டார். தொடர்ந்து மகன் தங்க கிருஷ்ணன் வீட்டை பூட்டிவிட்டு, சாவியை மின்சார மீட்டர் பெட்டி அருகே வைத்து விட்டு தான் வேலை பார்க்கும் கடைக்கு சென்றார்.

மாலையில் வேலை முடிந்து ராஜேஸ்வரி வீட்டுக்கு வந்தார். அப்போது, வீடு வழக்கம் போல் பூட்டி கிடந்தது. சாவி வழக்கமாக வைக்கப்படும் இடத்தில் அப்படியே இருந்தது.

அவர் சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்றார். தொடர்ந்து பீரோவை திறந்து பார்த்த போது, அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், சிறிய அறையில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு செல்வதையும், சாவியை மின்சார மீட்டர் பெட்டி அருகே வைத்து செல்வதையும் மர்ம நபர்கள் நோட்டமிட்டு இருந்துள்ளனர். அதன்படி கைவரிசையும் காட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்–இன்ஸ்பெக்டர்கள் நாராயணபெருமாள், ஜான் கென்னடி ஆகியோர் சம்பவ இடத்துக்கு  சென்று விசாரணை நடத்தினர். மேலும் நாகர்கோவிலில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மோப்ப நாய் வீட்டில் இருந்து வடக்கு புறமாக சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இந்த சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். பூட்டிய வீட்டில் பட்டப்பகலில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story