பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: வாயில் விஷம் ஊற்றி கொலை செய்த மாமியார் உள்பட 2 பேர் கைது


பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: வாயில் விஷம் ஊற்றி கொலை செய்த மாமியார் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 March 2018 4:03 AM IST (Updated: 25 March 2018 4:03 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே பெண் தற்கொலை வழக்கில் அவரது மாமியார் உள்பட 2 பேர் வாயில் விஷம் ஊற்றி கொலை செய்தது தெரிய வந்தது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ள மேற்கத்தியனூர் அரசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜயரங்கன் என்பவரின் மகன் கோவிந்தராஜ். இவரது மனைவி வெண்ணிலா (வயது 22). கோவிந்தராஜ் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது வெண்ணிலாவை காதலித்து, 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

திருமணத்திற்கு பிறகு கோவிந்தராஜ் வெண்ணிலாவை தனது சொந்த ஊருக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்தார். திருப்பூரில் இருந்து கோவிந்தராஜ் மாதம் ஒருமுறை வீட்டிற்கு வந்து மனைவி, குழந்தையை பார்த்துவிட்டு செல்வார்.

இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி வெண்ணிலா வீட்டில் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார். வெண்ணிலாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் முதலில் தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா விசாரணை நடத்தி வந்தார்.

விசாரணையில், வெண்ணிலாவின் மாமியார் சின்னதாயி (50), கிருஷ்ணகிரி மாவட்டம் கதவணியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி மற்றொரு சின்னதாயி (60) ஆகிய 2 பேரும் சேர்ந்து வெண்ணிலாவை அடித்து உதைத்து, வாயில் விஷத்தை ஊற்றி கொலை செய்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து தற்கொலை வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி, மாமியார் சின்னதாயி, மற்றொரு சின்னதாயி ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
1 More update

Next Story