ஊட்டி அருகே பதற வைக்கும் பைக்காரா படகு இல்ல சாலை


ஊட்டி அருகே பதற வைக்கும் பைக்காரா படகு இல்ல சாலை
x
தினத்தந்தி 4 May 2018 4:30 AM IST (Updated: 4 May 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே உள்ள பைக்காரா படகு இல்ல சாலையை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊட்டி,

ஊட்டி-கூடலூர் சாலையில் பைக்காரா அணை உள்ளது. இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், அந்த அணையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின்னர் பைக்காரா படகு இல்லமாக செயல்பட்டு வருகிறது. தற்போது கோடை சீசனையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பைக்காரா படகு இல்லத்துக்கு வந்து செல்கின்றனர்.

அங்கு சுற்றுலா பயணிகள் அடர்ந்து வளர்ந்த பசுமையான மரங்கள், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீர் போன்றவற்றை ரசித்து பார்க்கிறார்கள். கரையோரத்தில் காட்டெருமை, புள்ளி மான் உள்ளிட்ட வனவிலங்குகளை காணலாம். தண்ணீரை கிழித்துக்கொண்டு அதிவேகமாக செல்லும் அதிவேக படகில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளுக்கு மோட்டார் படகுகளும் இயக்கப்படுகிறது. ஊட்டி-கூடலூர் சாலையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வனப் பகுதி வழியாக பைக்காரா படகு இல்லத்துக்கு சாலை ஒன்று செல்கிறது.

வனத்துறை சார்பில், ஜீப் மற்றும் கார்களுக்கு ரூ.15, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5, வேன்களுக்கு ரூ.30 என நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பைக்காரா படகு இல்ல சாலை கடந்த பல மாதங்களாக மிகவும் குண்டும், குழியுமாக காணப் படுகிறது. ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் ஊர்ந்து, செல் கிறது.

சுற்றுலா பயணிகளை பதற வைக்கும் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதை தொடர்ந்து குண்டும், குழியுமாக இருந்த சில இடங்களில் மணல் கொட்டப்பட்டு சமன்படுத்தப்பட்டது. காற்றில் மணல் பரப்பதாலும், மழையில் அடித்து செல்லப்படுவதாலும் தற்காலிக சீரமைப்பும் பயன் இல்லாமல் போய்விட்டது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தினமும் பைக்காரா படகு இல்லத்துக்கு வாகனங்களில் வந்து செல்கிறார்கள். சாலை பழுதடைந்து காணப்படுவதால் வாகனங்களின் டயர்களை பதம் பார்க்கும் நிலை உள்ளது. அப்படி வாகனங்களில் பழுது ஏற்பட்டால், அதனை சரிசெய்ய அங்கு எந்தவிதமான வசதிகளும் இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை முழுமையாக சீரமைக்காமல் குழிகளில் மணலை கொட்டி உள்ளனர். காற்றில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டுனர்களின் கண்களில் பட வாய்ப்பு உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்து நிகழும் அபாயம் உள்ளது. சில சுற்றுலா பயணிகள் கூடலூர் சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு பைக்காரா படகு இல்லத்துக்கு நடந்தே செல்கின்றனர். சாலைகளில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு, விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

எனவே, பைக்காரா படகு இல்லத்துக்கு செல்லும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுவதால், மிகவும் பழுதடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story