கர்நாடகா தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறாது வைகோ பேட்டி


கர்நாடகா தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறாது வைகோ பேட்டி
x
தினத்தந்தி 5 May 2018 11:00 PM GMT (Updated: 5 May 2018 9:12 PM GMT)

கர்நாடகா தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறாது என்று கும்பகோணத்தில் வைகோ கூறினார்.

கும்பகோணம்,

ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ தமிழகம் முழுவதும் காவிரி உரிமை மீட்பு பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று கும்பகோணம் வந்த அவர் பழைய மீன்மார்க்கெட் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அவருடன் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதயகுமார், தி.மு.க. மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், அன்பழகன் எம்.எல்.ஏ. , கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார், முன்னாள் ஒன்றிய பொருளாளர் வெங்கடேசன், நகர செயலாளர் செந்தில், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கிரிதரன் ஆகியோர் வந்தனர்.

முன்னதாக வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவை ஆண்ட எந்த மத்திய அரசும் செய்யாத துரோகத்தை தற்போதுள்ள பிரதமர் மோடி திட்டமிட்டு செய்து வருகிறார். தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் முழுவதும் ஊர் ஊராக சென்று இப்பகுதியில் பெரும் ஆபத்து வரப்போகிறது என தெரிவித்து வருகிறேன். கர்நாடகாவில் அணைகளை கட்டுவதால் எவ்வளவு தண்ணீர் கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டாலும் அந்த தண்ணீர் மேட்டூருக்கு வராது.

இந்தியா முழுவதும் எங்கும் இல்லாத அளவிற்கு கனிம பொருட்கள் காவிரி படுகையான டெல்டா பகுதியில் தான் அதிகமாக உள்ளது. விவசாய நிலங்களில் எரிவாயுகளை எடுப்பதற்காக விவசாய நிலத்தில் எங்கு வேண்டுமானாலும் ஆழ்குழாய் அமைத்து எரிவாயு எடுத்து கொள்ளலாம் என விதிகளை மாற்றி ஜெம் நிறுவனம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் பெற்று விட்டது. இதனை தடுக்கும் வகையில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

காவிரி பிரச்சினை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமரை சந்திக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கான முயற்சியும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தார். ஆனால் பிரதமர் மோடி அனைத்து கட்சி தலைவர்்களை சந்திக்க அனுமதி கொடுக்காமல் தமிழர்களை அவமதித்து விட்டார். பிரதமர் மோடி பிரதமராக இருக்க கூடிய தகுதியை இழந்து விட்டார். இந்தியா முழுவதும் பா.ஜ.க.வுக்கு எதிரான அலை வீசுகிறது. பா.ஜ.க எதிரான அலை என்று சொல்வதை விட இந்துத்துவாவிற்கு எதிரான அலை என்று தான் சொல்ல வேண்டும்.

மோடி மீண்டும் பிரதமராக முடியாது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு பச்சை துரோகம் செய்து வருகிறது. கர்நாடகா தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறாது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story