கோவில்பட்டியில் துணிகரம் ஓட்டலில் பணம்– செல்போன்கள் திருட்டு பல்பொருள் அங்காடியிலும் கொள்ளை முயற்சி


கோவில்பட்டியில் துணிகரம் ஓட்டலில் பணம்– செல்போன்கள் திருட்டு பல்பொருள் அங்காடியிலும் கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 9 May 2018 2:00 AM IST (Updated: 9 May 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ஓட்டலின் பூட்டை உடைத்து பணம்– செல்போன்களை திருடியதுடன், அருகில் உள்ள பல்பொருள் அங்காடியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் ஓட்டலின் பூட்டை உடைத்து பணம்– செல்போன்களை திருடியதுடன், அருகில் உள்ள பல்பொருள் அங்காடியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.

ஓட்டலில் திருட்டு

கோவில்பட்டி அருகே பழைய அப்பனேரியை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 39). இவர் கோவில்பட்டி– எட்டயபுரம் ரோட்டில் ஓட்டல் மற்றும் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இவைகள் அடுத்தடுத்து உள்ளன. நேற்று முன்தினம் இரவில் வியாபாரம் முடிந்த பின், பொன்ராஜ் வழக்கம்போல் தனது ஓட்டல், அங்காடியை பூட்டிச் சென்றார்.

பின்னர் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர் ஓட்டலின் முன்பக்க ‌ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தார். பின்னர் அவர், அங்கு மேஜையில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான 3 செல்போன்கள், ரூ.5 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகள், ரூ.700 ஆகியவற்றை திருடினார்.

பல்பொருள் அங்காடி

பின்னர் அவர், ஓட்டலின் பக்கவாட்டில் இருந்து பல்பொருள் அங்காடிக்கு செல்லும் பாதையில் உள்ள கதவின் பூட்டை உடைக்க முயன்றார். ஆனால் அதனை உடைக்க முடியவில்லை. இதனால் பல்பொருள் அங்காடியில் கொள்ளை முயற்சியை கைவிட்டு மர்மநபர் தப்பிச் சென்றார்.

நேற்று காலையில் பொன்ராஜ் தனது ஓட்டலின் பூட்டு உடைக்கப்பட்டு செல்போன்கள், சிகரெட்டுகள், பணம் திருட்டு போனதையும், பல்பொருள் அங்காடியில் கொள்ளைமுயற்சி நடந்ததையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

மர்மநபர் கைவரிசை

அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரவில் மர்மநபர் துணியால் முகத்தை மூடியவாறு வந்து, திருடிச் சென்ற சம்பவம் பதிவாகி இருந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் வழக்குப்பதிவு செய்து அந்த மர்மநபரை தேடி வருகிறார்.


Next Story