டிரைவர் கொலையில் 3 பேர் கைது மேலும் சிலருக்கு போலீஸ் வலைவீச்சு


டிரைவர் கொலையில் 3 பேர் கைது மேலும் சிலருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 20 May 2018 10:30 PM GMT (Updated: 20 May 2018 9:45 PM GMT)

குமாரபாளையம் அருகே, லாரியை திருடிச்சென்ற டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குமாரபாளையம்,

குமாரபாளையம் அருகே படைவீடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான சிமெண்டு ஆலைக்கு சிமெண்டு ஏற்றிச்செல்லும் லாரிகள் நிறுத்தப்படும் இடத்தில், நிறுத்தப்பட்டு இருந்த கவுண்டனூரை சேர்ந்த சின்னதம்பி என்பவரின் லாரி திருட்டுபோனது. உடனடியாக ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் தேடியபோது, அந்த லாரி குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து லாரியை மீட்ட டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் அந்த லாரியின் உள்ளே படுத்திருந்த வீ.மேட்டூர் பகுதியினை சேர்ந்த டிரைவர் முருகேசன் (வயது 45) என்பவரை லாரிகள் நிறுத்தும் இடத்திற்கு அழைத்து வந்து, சரமாரியாக அடித்து உதைத்ததில் அவர் அங்கேயே இறந்து போனார்.

3 பேர் கைது

இதையறிந்த குமாரபாளையம் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து, திருட்டுபோன லாரியின் உரிமையாளர் சின்னதம்பி உள்பட பலர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் குமாரபாளையம் பச்சாம்பாளையம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த லாரி உரிமையாளர் சின்னதம்பி (47) மற்றும் டிரைவர்கள் மலையம்பாளையத்தை சேர்ந்த சந்திரன் என்ற ராஜாகண்ணு (58), படைவீடு பகுதியை சேர்ந்த சதாசிவம் (40) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து, திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தொடர்ந்து வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story