ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: 11 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் பணி நிறுத்தம்
ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலியாக துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் பணி நிறுத்தப்பட்டது.
தூத்துக்குடி,
ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலியாக துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் பணி நிறுத்தப்பட்டது.
பிரேத பரிசோதனைதூத்துக்குடியில் நேற்று முன்தினம் 2 இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 10 பேர் பலியானார்கள். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். அவரது உடலும் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
இவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டனர். அதன்படி நேற்று மதியம் 1 மணி அளவில் பிரேத பரிசோதனை தொடங்கியது.
மாஜிஸ்திரேட்டுகள் அண்ணாமலை, சரவணக்குமார் உள்பட 4 பேர் முன்னிலையில் டாக்டர்கள் சுடலைமுத்து, மனோகரன் உள்ளிட்ட டாக்டர்கள் குழுவினரும் பிரேத பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஒரு உடலுக்கு ஒரு மாஜிஸ்திரேட்டு, 4 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் இதில் ஈடுபட்டனர்.
நிறுத்தம்துப்பாக்கி சூட்டில் பலியான கார்த்திக், சண்முகம் ஆகியோர் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும்படி அவர்களின் உறவினர்கள் கேட்டுக்கொண்டனர். அதன்படி அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்ததும் அவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஐகோர்ட்டு திடீரென்று ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்கள் மத்திய குழு முன்னிலையில் தான் பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும், எனவே, பிரேத பரிசோதனையை உடனடியாக நிறுத்தக்கோரியும் அதிரடியாக உத்தரவிட்டது.
இதுகுறித்த தகவல்கள் மாஜிஸ்ரேட்டுகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் பிரேத பரிசோதனை செய்யும் பணி உடனடியாக நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 11 பேரின் உடல்களையும் பதப்படுத்த டாக்டர்கள் நடவடிக்கை எடுத்தனர்.