முதல்–மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றார் சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் வாழ்த்து


முதல்–மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றார் சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் வாழ்த்து
x
தினத்தந்தி 23 May 2018 11:00 PM GMT (Updated: 2018-05-24T03:18:35+05:30)

கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்)–காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மலர்ந்தது. மாநிலத்தின் 24–வது முதல்–மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்)–காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மலர்ந்தது. மாநிலத்தின் 24–வது முதல்–மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றார். விழாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதல்–மந்திரிகள் மற்றும் தேசிய கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு நேரில் வாழ்த்தினர்.

மெஜாரிட்டி கிடைக்கவில்லை

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12–ந் தேதி நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 இடங்களில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக உள்ளது. காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கூட்டணி 38 இடங்களிலும் வெற்றி பெற்றன. சுயேச்சைகள் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது. பெரும்பான்மை இல்லாத நிலையில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா ஆட்சி அமைக்க முயன்று தோல்வி கண்டது. அந்த கட்சியின் முதல்–மந்திரி எடியூரப்பா 3 நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார்.

குமாரசாமி முதல்–மந்திரி

அதைத்தொடர்ந்து ஆட்சி அமைக்க வருமாறு குமாரசாமிக்கு, கவர்னர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் 23–ந் தேதி(அதாவது நேற்று) பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று குமாரசாமி அறிவித்தார். அதன்படி குமாரசாமி, கர்நாடகத்தின் 24–வது முதல்–மந்திரியாக பதவி ஏற்கும் விழா பெங்களூரு விதான சவுதா முன்புறத்தில் நேற்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. இதற்காக திறந்தவெளியில் விதான சவுதா முன்புள்ள படிக்கட்டில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

பதவி ஏற்பு விழா நடைபெறும் முன்பாக மதியம் 3 மணியளவில் இடி–மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் மேடை மற்றும் இருக்கைகள் மழையில் நனைந்தன. பதவி ஏற்பு விழா நடைபெறும் மேடை மட்டும் தார்பாய் போட்டு மூடப்பட்டது. மழை சிறிது நேரம் பெய்துவிட்டு நின்றது. அதைத்தொடர்ந்து திட்டமிட்டப்படி மாலை 4.30 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

பதவி ஏற்றார்

தேசிய கீதத்துடன் இந்த விழா தொடங்கியது. இதில் குமாரசாமி கர்நாடகத்தின் 24–வது முதல்–மந்திரியாக பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் வஜூபாய் வாலா, பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். குமாரசாமி, கடவுள் மற்றும் கன்னட மக்கள் பெயரில் பதவி ஏற்றார். கர்நாடகத்தின் முதல்–மந்திரியாக பதவி ஏற்றதற்கான கோப்பில் குமாரசாமி கையெழுத்திட்டார்.

பின்னர் குமாரசாமிக்கு கவர்னர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வர் துணை முதல்–மந்திரியாக பதவி ஏற்றார். அவருக்கும் கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பரமேஸ்வர் கடவுள் பெயரில் பதவி ஏற்றார்.

சோனியா–ராகுல் காந்தி

பதவி ஏற்பு விழா 15 நிமிடங்களில் நடந்து முடிந்தது.

இந்த விழாவில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்–மந்திரி மம்தா பானர்ஜி, கேரளா முதல்–மந்திரி பினராயி விஜயன், ஆந்திரா முதல்–மந்திரி சந்திரபாபுநாயுடு, புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஐக்கிய ஜனதா தளம்(சரத்யாதவ் அணி) தலைவர் சரத்யாதவ், தேசியவாத கட்சி தலைவர் சரத்பவார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் கம்யூனிஸ்டு தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, ராஜா, லாலுபிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ், முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையா, நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்–மந்திரி வீரப்பமொய்லி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் தனித்தனி பஸ்களில் வந்து கலந்து கொண்டனர். குறிப்பாக ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா புறக்கணித்தது

தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவ் நேற்றே பெங்களூருவுக்கு வந்து குமாரசாமிக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு சென்றார். குமாரசாமி 2–வது முறையாக முதல்–மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். இதற்கு முன்பு 2007–ம் ஆண்டு அவர் பா.ஜனதா–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் முதல்–மந்திரியாக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவி ஏற்பின்போது குமாரசாமி பட்டு சட்டை, பட்டு வேட்டி அணிந்திருந்தார். அவரது மனைவி அனிதா குமாரசாமி, மகன் நிகில்கவுடா உள்பட குடும்பத்தினர் கலந்து கொண்டனர். குமாரசாமி தனது தாயார் சென்னம்மா காலில் விழுந்து ஆசி பெற்றார். இந்த பதவி ஏற்பு விழாவை பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா புறக்கணித்தது.

கவனத்தை ஈர்த்தது

இந்த பதவி ஏற்பு விழாவையொட்டி விதான சவுதாவின் முன் பகுதியில் உள்ள சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. பொதுமக்கள் அமர்ந்து விழாவை பார்த்தனர். பொதுமக்கள் பார்க்க வசதியாக 20–க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. அகன்ற திரைகள் வைக்கப்பட்டு இருந்தன. விதான சவுதாவை சுற்றிலும் ஆங்காங்கே குமாரசாமி உருவப்படம் அடங்கிய பெரிய பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

மேலும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கொடிகள் அதிகளவில் கட்டப்பட்டு இருந்தன. அகில இந்திய அளவில் பா.ஜனதாவுக்கு எதிராக அணி திரளும் வகையில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்று ஒற்றுமையை வெளிப்படுத்தியது ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தை ஈர்த்தது. அடுத்து வரும் நாட்களில் இந்த தலைவர்கள் ஒன்று சேர்ந்து அணியை உருவாக்குவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

--–

(பாக்ஸ்) தலைவர்கள் உரையாடினர்

பதவி ஏற்பு விழா முடிந்ததும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் முன்னாள் தலைவி சோனியா காந்தி ஆகியோர் மற்ற கட்சி தலைவர்களுடன் உரையாடியபடி இருந்தனர். மாயாவதியும், மம்தா பானர்ஜியும் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதேபோல் சோனியா காந்தி மற்றும் மாயாவதி கட்டி அணைத்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர். இந்த சந்திப்பின்போது தலைவர்கள் நாட்டில் நிலவும் அரசியல் நிலவரம் குறித்து தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். அரசியலில் எதிரும், புதிருமாக இருந்த குமாரசாமியும், டி.கே.சிவக்குமாரும் கைகளை கோர்த்து உயர்த்தி காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Next Story