தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தியது ஏன்? தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தியது ஏன் என்று விரிவான பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
அனைத்திந்திய வக்கீல்கள் சங்கப் பொதுச்செயலாளர் முத்து அமுதநாதன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் பள்ளி மாணவி உள்பட 13 பேர் பலியாகினர். மேலும் 150–க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் 50–க்கும் அதிகமானோர் தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கி சூடு சம்பவம் முறையான அனுமதி பெறாமல் நடத்தப்பட்டுள்ளது. எனவே இதற்கு காரணமான தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., டி.ஐ.ஜி., தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உள்ளிட்டவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இதுபோல், தூத்துக்குடியை சேர்ந்த கந்தகுமார் தாக்கல் செய்திருந்த மனுவில், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்க வேண்டும். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இதுகுறித்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தது.
இந்தநிலையில் அந்த வழக்குகள் நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன
அப்போது தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்யடின் ஆஜராகி, துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்து அதற்கான அரசாணையை தாக்கல் செய்தார்.
ஆனால் அதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். ‘‘துப்பாக்கி சூடு சம்பவம் நடத்தப்பட்டது ஏன், இந்த சம்பவத்தில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா, அதற்கான காரணங்கள் என்ன, துப்பாக்கி சூடு நடத்துவதற்கு உத்தரவிட்டது யார் ஆகிய கேள்விகளுக்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தான் உத்தரவிட்டு இருந்தோம் என்று கூறிய நீதிபதிகள், ஜூன் 6–ந்தேதி இந்த சம்பவம் குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். பின்பு வழக்கை ஜூன் 6–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.