உடுமலை சங்கர் கொலை: தூக்கு தண்டனை கைதியை மதுரை சிறைக்கு மாற்றக்கோரி வழக்கு அதிகாரிகள் பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு
உடுமலை சங்கர் கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியை மதுரை சிறைக்கு மாற்றக்கோரி வழக்கு அதிகாரிகள் பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
திண்டுக்கல்லை சேர்ந்த பி.பார்வதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
கடந்த 2016–ம் ஆண்டு உடுமலைப்பேட்டையில் சங்கர் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் எனது மகன் செல்வகுமார் கைதானார். அந்த வழக்கில் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. அவர் தற்போது கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பல்வேறு இடையூறுகள் கொடுக்கப்படுகின்றன. ஜெயிலில் அவரை சந்தித்தபோது, தனக்கு கொடுக்கப்படும் சாப்பாட்டில் உப்பு, இரும்புத் துகள்கள் அதிக அளவில் சேர்த்து தருவதாகவும், இரவில் தூங்கக்கூடாது என்பதற்காக தரையில் தண்ணீர் ஊற்றிவிடுவதாகவும் தெரிவித்தார். இதனால் என் மகன் மனஉளைச்சலில் உள்ளான். மேலும் எனது வயது முதிர்வின்காரணமாகவும், உடல் நலக்குறைவாலும் கோவைக்கு சென்று அவரை பார்த்து திரும்புவதில் சிரமம் உள்ளது. எனவே எனது மகனை கோவை ஜெயிலில் இருந்து மதுரை ஜெயிலுக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், மனுதாரர் கோரிக்கையை பரிசீலித்து 6 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.