விழுப்புரத்தில் அடகு கடைக்காரர் வீட்டில் 125 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
விழுப்புரத்தில் அடகு கடைக்காரர் வீட்டில் 125 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை நடத்தினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் கணபதி நகர் சென்னை சாலையை சேர்ந்தவர் ஞானபண்டிதர் மகன் கோவிந்தராஜன்(வயது 49). புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார். அதன்படி கடந்த 8–ந்தேதி மாலை கோவிந்தராஜ் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் கார் மூலம் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் சுற்றுலாவை முடித்த கோவிந்தராஜ் தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை மீண்டும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனால் திடுக்கிட்ட கோவிந்தராஜ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது படுக்கை அறை பீரோ பூட்டு உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 125 பவுன் நகைகள், 3 லட்சம் ரூபாய் ரொக்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி பொருட்களையும் காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜ் இதுபற்றி விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்–இன்ஸ்பெக்டர் மருது ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கொள்ளை நடத்த வீட்டை பார்வையிட்டு, விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கோவிந்தராஜ் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோ மற்றும் பூஜை அறையில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள 125 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதனிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். மேலும் அருகில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்கள் வந்து சென்ற காட்சிகள் பதிவாகி உள்ளதா? எனவும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்பநாய் ராக்கி கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சென்னை சாலையில் பாப்பாங்குளம் பகுதி வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடி சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். அடகு கடைக்காரர் வீட்டில் 125 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.30 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கொள்ளை, திருட்டு, வழிப்பறி, மதுபாட்டில்கள் கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் போலீசார் விடிய, விடிய தீவிர வாகன சோதனை நடத்தினர். மேலும் சந்தேக நபர்களின் நடமாட்டத்தையும் கண்காணித்தனர். இருந்தபோதிலும் போலீசாருக்கு டிமிக்கி கொடுக்கும் வகையில் மர்மநபர்கள் அடகு கடைக்காரர் வீட்டின் பூட்டை உடைத்து, ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் விழுப்புரம் பகுதி மக்களிடையே பெரும் பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கணபதி நகர் பகுதி மக்கள் கூறுகையில், கொள்ளை நடந்த பகுதி அருகே விழுப்புரம்–சென்னை நெடுஞ்சாலையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் விழுப்புரம் நகருக்கு இந்த வழியாக வராமல், விழுப்புரம் புறவழிச்சாலை வழியாக சென்று வருகின்றன. இதன் காரணமாக கணபதி நகர் பகுதியில் வாகன போக்குவரத்து இல்லாத காரணத்தால், போலீசார் சரியாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில்லை. ஸ்டார்மிங் ஆபரேஷன் என்கிற பெயரில் நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் கணபதி நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடாததால், அடகு கடைக்காரர் வீட்டை குறிவைத்து மர்மநபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.